ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 17 வீரர்கள் பலி


ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 17 வீரர்கள் பலி
x
தினத்தந்தி 17 Jun 2020 9:43 PM GMT (Updated: 17 Jun 2020 9:43 PM GMT)

ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 வீரர்கள் பலியாகினர்.

காபூல், 

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையிலான மோதல் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. ராணுவ முகாம்கள் சோதனைச் சாவடிகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் அந்த நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள ஜாவ்ஷான் மாகாணத்தில் பாலாகிஷார் என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த 10கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ராணுவ முகாமை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ராணுவ வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் பல மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த மோதலில் ராணுவ வீரர்கள் 12 பேர் பலியாகினர். மேலும் 5 வீரர்கள் படுகாயமடைந்தனர். அதேசமயம் பயங்கரவாதிகள் தரப்பில் 5 பேர் உயிரிழந்தனர் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதேபோல் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது ராணுவ வீரர்களுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 5 ராணுவ வீரர்களும், 4 பயங்கரவாதிகளும் பலியாகினர்.

Next Story