2-ம் உலகப்போரின் 75-ம் ஆண்டு வெற்றி விழா: மாஸ்கோவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் இந்திய வீரர்கள்


2-ம் உலகப்போரின் 75-ம் ஆண்டு வெற்றி விழா: மாஸ்கோவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் இந்திய வீரர்கள்
x
தினத்தந்தி 24 Jun 2020 11:35 PM GMT (Updated: 24 Jun 2020 11:35 PM GMT)

2-ம் உலகப்போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்திய 75-வது ஆண்டு வெற்றி விழாவை யொட்டி, மாஸ்கோ நகரில் நடைபெற்ற ரஷிய ராணுவ அணிவகுப்பில் இந்திய வீரர்களும் பங்கேற்றனர். இதை ரஷிய அதிபர் புதின், நமது ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர்.

மாஸ்கோ, 

2-ம் உலகப்போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்திய 75-வது ஆண்டு வெற்றி விழாவை யொட்டி, மாஸ்கோ நகரில் நடைபெற்ற ரஷிய ராணுவ அணிவகுப்பில் இந்திய வீரர்களும் பங்கேற்றனர். இதை ரஷிய அதிபர் புதின், நமது ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர்.


இரண்டாம் உலகப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது 1945-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி ரஷிய படைகள் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினை சுற்றி வளைத்தன. இதனால் ஜெர்மனி அதிபர் சர்வாதிகாரி ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதால் அந்த நாட்டு ராணுவம் இங்கிலாந்து, ரஷியா உள்ளிட்ட நேச நாட்டு படைகளிடம் சரண் அடைந்தது. இதனால் போர் முடிவுக்கு வந்தது.

2-ம் உலகப் போரில் ஜெர்மனியை வீழ்த்தியதை ரஷியா ஒவ்வொரு ஆண்டும் மே 9-ந் தேதி வெற்றி தின விழாவாக கொண்டாடி வருகிறது. ஜெர்மனியை வெற்றி கொண்ட 75-வது ஆண்டு வெற்றி தினத்தை வழக்கம் போல் கடந்த மாதம் 9-ந் தேதி கொண்டாட ரஷியா முடிவு செய்து இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவை ரஷியா தள்ளிவைத்தது.


இந்த நிலையில் இந்த வெற்றி விழா ஜூன் 24-ந் தேதி நடைபெறும் என்று கடந்த மாதம் 26-ந் தேதி ரஷிய அதிபர் புதின் அறிவித்தார். இதில் கலந்து கொள்ளுமாறு இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

புதின் அழைப்பை ஏற்று 3 நாள் சுற்றுப்பயணமாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இந்திய விமானப்படை விமானம் மூலம் நேற்று முன்தினம் ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றார். அன்று ரஷிய துணைப் பிரதமர் யூரி போரிசோவை அவர் சந்தித்து பேசினார். அப்போது இந்திய-ரஷிய நட்புறவை பலப்படுத்துவது, ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். அத்துடன் 75-வது வெற்றி விழாவை கொண்டாடும் ரஷிய மக்களுக்கு அவர் வாழ்த்தும் தெரிவித்தார்.

இந்த நிலையில், மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் நேற்று வெற்றி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி ரஷிய ராணுவத்தின் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. ராணுவ வீரர்கள் மிடுக்குடன் அணிவகுத்து சென்றனர்.

ரஷிய ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த பேரணியில் டாங்கிகள் அணிவகுத்து சென்றன. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் விண்ணில் பறந்து சாகசம் நிகழ்த்தின.

கோலகலமாக நடைபெற்ற இந்த வெற்றி விழா பேரணியில் இந்தியா, சீனா உள்ளிட்ட 18 நாடுகளின் ராணுவ வீரர்களும் பங்கேற்றனர்.

இந்தியாவின் சார்பில் முப்படைகளைச் சேர்ந்த 75 வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பேரணியில் சமூக இடைவெளியுடன் கம்பீரமாக அணிவகுத்து சென்றனர்.

ராணுவ அணிவகுப்பை ரஷிய அதிபர் புதின், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர்.

பேரணியின் போது அதிபர் புதின் பேசுகையில், ஜெர்மனியின் நாஜிப்படைகளை வீழ்த்திய 75-ஆண்டு விழாவையொட்டி ரஷிய ராணுவத்துக்கும், விழாவில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் நாஜிப்படைகளிடம் இருந்து ஐரோப்பிய நாடுகளை மீட்கும் மிகப்பெரிய பொறுப்பை ரஷிய படைகள் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்ததாகவும், இதற்காக ரஷிய அதிக விலை கொடுத்ததாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

கொரொனா பெருந்தொற்று பரவல் இருந்து வரும் இந்த சமயத்தில், ரஷியா வந்து வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதற்காக வெளிநாட்டு தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் புதின் கூறினார்.

பின்னர் இந்த விழாவில் கலந்து கொண்டது பற்றி ராஜ்நாத் சிங் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், இரண்டாம் உலகப்போரின் போது 1941 முதல் 1945 வரை நாட்டை பாதுகாக்க தேசபக்தியுடன் ரஷிய மக்கள் போரிட்டு வெற்றி பெற்றதன் 75-வது ஆண்டு விழாவை யொட்டி மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற அணிவகுப்பில் கலந்து கொண்டதாகவும், அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் முப்படைகள் பங்கேற்றது குறித்து தான் மிகுந்த பெருமை கொள்ளவதாகவும் அவர் கூறி உள்ளார்.

Next Story