உலக செய்திகள்

கொரோனா தொற்று, ஐரோப்பிய நாடு, நிபுணர்கள் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் 2-வது அலை வீசும் ஆபத்து!நிபுணர்கள் எச்சரிக்கை + "||" + Europe should brace for second wave, says EU coronavirus chief

கொரோனா தொற்று, ஐரோப்பிய நாடு, நிபுணர்கள் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் 2-வது அலை வீசும் ஆபத்து!நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனா தொற்று, ஐரோப்பிய நாடு, நிபுணர்கள் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் 2-வது அலை வீசும் ஆபத்து!நிபுணர்கள் எச்சரிக்கை
உலகமெங்கும் இந்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1 கோடி என்ற 8 இலக்க எண்ணை நோக்கி புல்லட் ரெயில் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.

உலகின் முதன்மையான எதிரி யார்?

சந்தேகத்துக்கு இடமின்றி சொல்லி விடலாம், கொரோனா வைரஸ் என்று.

ஒட்டுமொத்த மனித குலமும் ஒவ்வொரு நாளும் நடுங்கிக்கொண்டு தான் இருக்கிறது.


உலகமெங்கும் இந்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1 கோடி என்ற 8 இலக்க எண்ணை நோக்கி புல்லட் ரெயில் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. ஐரோப்பாவில் கொரோனா தொற்று பாதிப்பு உலகளவிலான பாதிப்பில் நான்கில் ஒரு பங்காக இருக்கிறது. ஏறத்தாழ 24 லட்சம் பேருக்கு தொற்று இருக்கிறது. பலியை பொறுத்தமட்டில் 1 லட்சத்து 90 ஆயிரத்தை எட்டியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி இந்த வைரஸ் தோன்றி முதன்முதலாக வெளிப்பட்டபோது, யாரும் இப்படி நடக்கும் என்று கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாது. அந்தளவுக்கு இந்த கொரோனா விசுவரூபம் எடுத்து பாதிப்புகளை நாளுக்கு நாள் பெருக்கி வருகிறது.

அமெரிக்காவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள், இந்த தொற்றின் மையமாக உருவாகி வருகின்றன.

பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கொரோனா வைரஸ் ஸ்பெயின், இத்தாலி நாடுகளில் கால் பதித்தபோதே வேகம் எடுத்தது. தொடர்ந்து இங்கிலாந்தில் நுழைந்தது. செக் குடியரசு, ஆஸ்திரியா, ஹங்கேரி, சுலோவாகியா என கொரோனாவின் படையெடுப்பு தொடர்ந்தது.

அதன் வேகத்தை பார்த்து மிரண்டு போன ஐரோப்பிய நாடுகள் மார்ச் மாதம் தொடங்கி ஊரடங்கு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த தொடங்கின. வாழ்வாதாரத்தை விட வாழ்வே பிரதானம் என்ற முடிவுக்கு சட்டென்று வந்தன அந்த நாடுகள்.

பொது முடக்கம், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கி போட்டன. இனியும் கொரோனாவுக்காக முடங்கிக்கொண்டால், நாடு முடங்கிப்போகும் என நினைத்த ஐரோப்பிய நாடுகள் மெல்ல மெல்ல கதவுகளை திறந்தன. பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கின.

அத்தியாவசியமற்ற கடைகளில் தொடங்கி விளையாட்டு வளாகங்கள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மீண்டும் இயங்கத்தொடங்கின. சுற்றுலா துறையையே முக்கிய வருமானமாக கொண்டிருந்த பல ஐரோப்பிய நாடுகளும் வெளிநாட்டு பயண சேவையை தொடங்கலாம் என்றிருந்த நேரத்தில், தனது ருத்ர தாண்டவத்தை கொரோனா மீண்டும் தொடங்கி இருக்கிறது.

இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் குளூக் வெளிப்படையாக பேசினார். “ஐரோப்பா முழுவதும் பொது முடக்கத்தை தளர்த்தியதின் விளைவாக கொரோனா தொற்று புதிதாக அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. கொரோனா மீண்டும் வேகம் எடுக்கும் ஆபத்து பற்றி நான் ஏற்கனவே பேசினேன். கடந்த 2 வாரங்களாக 30 நாடுகளில் ஒட்டுமொத்தமாக பாதிப்பு அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

ஐரோப்பிய நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறினால், மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் என்பது கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று அவர் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்.


இப்போது ஐரோப்பாவில் கொத்து கொத்தாக பரவத்தொடங்கி உள்ளது.

ஜெர்மனியில் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் 1,500 தொழிலாளர்களுக்கு தொற்று பாதித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் 2 நகரங்களில் பொதுமுடக்கம் போட்டிருக்கிறார்கள்.

பிரான்சில் 230 பகுதிகள் அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அங்கே அரசாங்கம் சொன்னாலும், மக்கள் கவலையோடு பார்க்கிறார்கள். இப்படி ஒவ்வொரு நாட்டிலும் புதிது புதிதாக தொற்று அதிகரித்தபடியே இருக்கிறது.

இந்த தருணத்தில் பல நிபுணர்கள் ஐரோப்பிய நாடுகளில் 2-வது அலை வீசும் ஆபத்து குறித்து பேசுகிறார்கள்.

பெல்ஜியம் நாட்டின் கத்தோலிக் பல்கலைக்கழகமான லியுவென்னின் வைரஸ் நிபுணர் பேராசிரியர் மார்க் வான் ரான்ஸ்ட் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் கிளர்ந்தெழும் மாபெரும் ஆபத்து பற்றி நான் ஏற்கனவே எச்சரித்து இருக்கிறேன். மக்கள் மறுபடியும் ஒன்றுகூடுவது தடுக்கப்பட வேண்டும். உணவு விடுதிகள், திரையரங்குகள், நாடக அரங்குகள் போன்றவற்றை மீண்டும் திறப்பது என்பது மக்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காது. மக்கள் பாதுகாப்பை உணர முடியாது. தொற்றுநோய் முடிவுக்கு வரவில்லை. அது மீண்டும் எழுச்சி பெற்றால் பேரழிவை ஏற்படுத்தி விடும்” என்கிறார்.

பாதுகாப்பான, வலுவான தடுப்பூசி பரவலான பயன்பாடு என்பது அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் வரும் என நம்புகின்றனர், வல்லுனர்கள்.

எனவே ஒவ்வொரு நாடும், பொருளாதார தரப்பு நடவடிக்கையையும், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையையும் மிக கவனமாக கையாள வேண்டிய தேவை எழுந்துள்ளது.

சுற்றுலா துறையையும், விருந்தோம்பல் துறையையும் மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள், உண்மையான அச்சுறுத்தலாக இருக்கும், கொரோனா தொற்று பரவலாக இருக்கட்டும், உயிர்ப்பலியாக இருக்கட்டும், இரண்டுமே தொடர்ந்து உயர்ந்து கொண்டுதான் இருக்கும் என்றும் வைரஸ் நிபுணர் பேராசிரியர் மார்க் வான் ரான்ஸ்ட் உறுதியாக சொல்கிறார்.

கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதை தடுக்க நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி இப்போது ஒலிக்கத்தொடங்கி விட்டது.

பொதுமக்கள் பொது இடங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிந்துதான் வரவேண்டும் என்று அரசுகள் வலியுறுத்துவதுடன், அனைத்து சுகாதார முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். தொடர்பு தடம் அறிதலுக்கு செயலிகளை ஐரோப்பிய நாடுகள் கொண்டு வரவேண்டும் என்று நிபுணர்கள் யோசனைகளை அடுக்குகிறார்கள். ஜெர்மனியில் தொடர்பு தடம் அறிதலுக்காக சாப் மற்றும் டச்சு டெலிகாம் நிறுவனங்கள் கூட்டாக ஒரு செயலியை கொண்டு வந்து அது வெற்றிகரமாக செயல்பட்டுவருவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பிரான்சிலும் அந்த நாட்டு அரசாங்கத்தால் இப்படி செயலி கொண்டு வரப்பட்டும் 3 சதவீத மக்கள்தான் அதை பதிவிறக்கம் செய்திருக்கிறார்களாம்.

இங்கிலாந்து அரசின் செயலி, கேலிக்குரியதாக மாறி இருக்கிறது. தாமதங்களாலும், வாக்குறுதிகளை நிறைவேற்றாததும் பின்னடைவாக மாறி இருப்பதாக வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு முதல்முறையாக வைரஸ் நிபுணர் பேராசிரியர் மார்க் வான் ரான்ஸ்ட் ஒரு புதிய யோசனையை சொல்கிறார்.

அது நல்ல காற்றோட்டம், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் என்பதாகும். பலர் கூடும் பகுதிகளில் இது முக்கியம் என்பது அவரது கருத்தாக இருக்கிறது. திரும்பத் திரும்ப வல்லுனர்கள் கூறும் கருத்து முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், கை சுகாதாரம் கடைப்பிடித்தல் என்பதாக இருக்கிறது. மக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதும் கொரோனாவின் 2-வது அலையை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது வல்லுனர்கள் கருத்தாக அமைகிறது.

தற்போது வட அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் கொரோனா அலை, சுனாமி அலையாக எழுச்சி பெற்று வருவதால், ஐரோப்பிய நாடுகளும், மக்களும் எச்சரிக்கையாக இருந்தால், தப்பிக்கலாம் இல்லையேல் பழிவாங்குவதுபோல கொரோனா மீண்டும் வந்து தாக்குவதை யாராலும் தடுக்க முடியாது என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

கொரோனாவின் முதல் அலையின் காயங்களே ஆறாத ரணங்களாக மாறி விட்டிருக்கும்போது, அரசாங்கங்களும், மக்களும் இணைந்து செயல்பட்டால்தான் 2-வது அலையை தடுக்க முடியும். முதல் அலையை விட 2-வது அலை ஆக்ரோஷமாக இருக்கும் என்ற நிபுணர்களின் வாக்கை புறந்தள்ளி விடாமல், ஐரோப்பிய மக்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களும் நினைவில் கொண்டாக வேண்டும். அதுதான் மனித குலத்துக்கு நல்லது.


தொடர்புடைய செய்திகள்

1. கூத்தாநல்லூரில் தாசில்தார், 6 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கொரோனா; தாலுகா அலுவலகம் மூடப்பட்டது
கூத்தாநல்லூரில் தாசில்தார் மற்றும் 6 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தாலுகா அலுவலகம் மூடப்பட்டது.
2. டாக்டர், நர்சுக்கு கொரோனா உறுதி: ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்
டாக்டர், நர்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் பணியாற்றிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.
3. நீலகிரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு 172 ஆக உயர்ந்து உள்ளது.
4. புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று; ஆரம்ப சுகாதார நிலைய நர்சு, ஊழியரும் பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் நர்சு, ஊழியருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கரூர் மாவட்டத்தில் நிதிநிறுவன உரிமையாளர் உள்பட புதிதாக 5 பேருக்கு கொரோனா
கரூர் மாவட்டத்தில், நிதிநிறுவன உரிமையாளர் உள்பட புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.