அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றம்: சவுதி அரேபிய மன்னர் சல்மான் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்


அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றம்: சவுதி அரேபிய மன்னர் சல்மான் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 1 Aug 2020 12:44 AM GMT (Updated: 1 Aug 2020 12:44 AM GMT)

சவுதி அரேபிய மன்னர் சல்மான் அறுவை சிகிச்சைக்கு பின் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.

ரியாத்,

சவுதி அரேபியாவில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மன்னராக இருந்து வருபவர் சல்மான் பின் அப்துல் அஜீஸ். 84 வயதான இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 20-ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மன்னர் சல்மானுக்கு பித்தப்பை அழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் பைசல் சிறப்பு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராயல் கோர்ட்டு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மன்னர் சல்மானுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் அவரது பித்தப்பை அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை லேபராஸ்கோபிக் எனப்படும் குறைந்த ஆபத்துடைய செயல் முறையில் மேற்கொள்ளப்பட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு மன்னர் சல்மானின் உடல்நிலை நல்ல முறையில் தேறி வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.

சவுதி அரேபியா மக்கள் நேற்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடிய நிலையில் மன்னர் சல்மான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நல்ல செய்தி கிடைத்துள்ளதாக ராயல் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

Next Story