உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடம் - டிரம்ப் சொல்கிறார்


உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடம் - டிரம்ப் சொல்கிறார்
x
தினத்தந்தி 29 Aug 2020 12:26 AM GMT (Updated: 29 Aug 2020 12:26 AM GMT)

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடத்தில் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. அதற்கு அடுத்த இடங்களில் பிரேசில், இந்தியா, ரஷியா ஆகிய நாடுகள் உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்தும் முக்கிய அம்சங்களில் ஒன்று, பரிசோதனையை தீவிரப்படுத்துவது ஆகும். அதிகமான பரிசோதனைகள் மூலம் தொற்று பாதித்தவரை விரைவில் கண்டுபிடித்து தனிமைப்படுத்தினால், இந்த தொற்று பரவலை தடுக்க முடியும். அந்த வகையில் கொரோனா பரிசோதனையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலையொட்டி வெள்ளை மாளிகையில் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப் கொரோனா பரிசோதனையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் இருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பிளாஸ்மா எனப்படும் சக்தி வாய்ந்த ஆன்டிபாடி சிகிச்சை உள்பட பலவிதமான பயனுள்ள சிகிச்சைகளை நாம் உருவாக்கியுள்ளோம். கொரோனா பரிசோதனையிலும் நாம் தொடர்ந்து சாதனைகளைப் புரிந்து வருகிறோம். பிற எந்த நாடும், அமெரிக்கா அளவுக்கு கொரோனா பரிசோதனை செய்யவில்லை. அதேசமயம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. அங்கு அதிகப்படியான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story