உலக செய்திகள்

அமெரிக்க போராட்டத்தில் வன்முறை: டிரம்ப் ஆதரவாளர்கள்-போராட்டக்காரர்கள் மோதல்; துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி + "||" + Violence in the American Struggle: Trump Supporters-Protesters Conflict; One person was killed in the shooting

அமெரிக்க போராட்டத்தில் வன்முறை: டிரம்ப் ஆதரவாளர்கள்-போராட்டக்காரர்கள் மோதல்; துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

அமெரிக்க போராட்டத்தில் வன்முறை: டிரம்ப் ஆதரவாளர்கள்-போராட்டக்காரர்கள் மோதல்; துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
அமெரிக்காவில் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. டிரம்பின் ஆதரவாளர்களும், போராட்டக்காரர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த மே மாதம் 25-ந் தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர்.


அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ்காரர், பிளாய்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்து அமெரிக்காவில் மாபெரும் போராட்டம் வெடித்தது. ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்கிற பெயரில் அமெரிக்கா முழுவதும் இனவெறிக்கு எதிராகவும் போலீசாரின் வன்முறையை கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்றன. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன.

இதனிடையே அமெரிக்காவின் ஒரு சில மாகாணங்களில் இன்றளவும் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினரின் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரேகான் மாகாணத்தில் 3 மாதங்களாக போராட்டம் நீடித்து வருகிறது. அங்குள்ள போர்ட்லேண்ட் நகரில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவை மீறியும், போலீசாரின் அனுமதியின்றியும் போராட்டங்கள் நடந்து வருவதால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தொடர்ந்து மோதல் வெடித்து வருகிறது. மேலும் போராட்டக்காரர்களை ஒடுக்க போர்ட்லேண்ட் நகரில் மத்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினரின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளர்கள் போர்ட்லேண்ட் நகரில் கடந்த மூன்று வாரங்களாக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினர் தொடர்ந்து போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் போர்ட்லேண்ட் நகரில் வழக்கம்போல் போராட்டத்தில் ஈடுபட்ட ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினர் அங்குள்ள போலீஸ் சங்கம் கட்டிடத்திற்கு தீ வைத்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போர்ட்லேண்ட் நகரை போலீசார் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினரின் போராட்டத்தை கலவரமாக பிரகடனப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து போர்ட்லேண்ட் நகரம் முழுவதும் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். அதே சமயம் போராட்டக்காரர்களும் போலீசார் மீது கற்கள் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் டிரம்பின் ஆதரவாளர்கள் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினரின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போர்ட்லேண்ட் நகரில் பேரணி நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், டிரம்பின் ஆதரவாக இருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் பாட்டில்கள், கற்கள் மற்றும் மிளகு பொடி உள்ளிட்டவற்றால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் போர்ட்லேண்ட் நகரம் முழுவதும் கலவர பூமியானது.

இதனிடையே டிரம்பின் ஆதரவாளர்களும், போராட்டக்காரர்களும் மோதிக்கொண்ட இடத்தில் திடீரென துப்பாக்கி சூடு நடந்தது. 3 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். துப்பாக்கி சூடு நடத்தியது யார்? உயிரிழந்த நபர் டிரம்பின் ஆதரவாளரா? அல்லது போராட்டக் குழுவைச் சேர்ந்தவரா? என்பன உள்ளிட்ட எந்த தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை. அதேசமயம் கலவரம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.