துணைவியை மன்னித்து தனது அழகிகள் குழுவினருடன் இணைந்து கொள்ள தாய்லாந்து மன்னர் உத்தரவு


துணைவியை மன்னித்து தனது அழகிகள் குழுவினருடன் இணைந்து கொள்ள தாய்லாந்து மன்னர் உத்தரவு
x
தினத்தந்தி 1 Sep 2020 10:27 AM GMT (Updated: 1 Sep 2020 10:27 AM GMT)

தாய்லாந்தில் சிறை வைக்கப்பட்டிருந்த தமது துணைவிக்கு மன்னிப்பு வழங்கி, ஜெர்மனியில் தனது அழகிகள் குழுவினருடன் இணைந்து கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார் தாய்லாந்து மன்னர்.

பெர்லின்

கொரோனாவுடன் தாய்லாந்து மக்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், அந்த நாட்டு மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் ஜெர்மனியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 20 அழகிகளுடன் குதூகலமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.

68 வயதான மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜேர்மனியில் இருந்து வருகிறார்.கொரோனா நெருக்கடியை அடுத்து ஜெர்மனியின் ஆல்பைன் ரிசார்ட்டில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் மன்னர் தனது ஊழியர்களுடன் தனிமைப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தாய்லாந்து மன்னரின் தனிப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரியும், மன்னரின் துணைவியுமான 35 வயது சினீனாட் வோங்வாஜிரபக்தி என்பவரின் சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டு ஜெர்மனிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.விமான நிலையத்திற்கு தாமே நேரடியாக சென்று மன்னர் வரவேற்றதாகவும் உள்ளூர் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.

மன்னரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்த சினீனாட், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மன்னரின் 67-வது பிறந்தநாளில் மன்னரின் துணைவியாக தேர்வு செய்யப்பட்டார்.ஏறக்குறைய ஒரு நூற்றாண்டிற்கு பிறகு ஒரு தாய்லாந்து மன்னர் தமது துணைவியாக ஒருவரை தெரிவு செய்தது இதுவே முதல் முறை.

ஆனால் அடுத்த மூன்று மாதங்களில் சினீனாட்டுக்கு வழங்கப்பட்டிருந்த மொத்த பொறுப்புகளும் பதவிகளும் பறிக்கப்பட்டு, தாய்லாந்தின் அதிக பாதுகாப்பு மிகுந்த சிறையில் அடைக்கப்பட்டார்.விசுவாசமற்ற தன்மை மற்றும் ராணியின் நிலைக்கு தம்மை உயர்த்த ஆசைப்பட்டது உள்ளிட்ட காரணங்கள் அரண்மனை தரப்பில் கூறப்பட்டது.

மேலும் மன்னரை அவர் மதிக்கவில்லை எனவும், தாய்லாந்து அரச பாரம்பரியங்களை அவர் மீறியதாகவும் கூறப்பட்டது.இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சினீனாட் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும், உடனடியாக ஜெர்மனி செல்ல மன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.இது இவ்வாறிருக்க மன்னரின் நான்காவது மனைவியான ராணியார் சுதிடா இந்த கொரோனா காலகட்டத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தனியாக செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Next Story