கொரோனாவுக்கு பரிந்துரைக்கும் மருந்து இருதய கோளாறுகளை அதிகரிக்கும்; அதிர்ச்சி தகவல் வெளியீடு


கொரோனாவுக்கு பரிந்துரைக்கும் மருந்து இருதய கோளாறுகளை அதிகரிக்கும்; அதிர்ச்சி தகவல் வெளியீடு
x
தினத்தந்தி 17 Sep 2020 10:59 AM GMT (Updated: 17 Sep 2020 10:59 AM GMT)

கொரோனா வைரசின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அசித்ரோமைசின் மருந்து இருதய கோளாறுகளை அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

வாஷிங்டன்,

கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பரந்த அளவில் அதிகரித்து வரும் சூழலில் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில், அசித்ரோமைசின் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது.  இது இருதய கோளாறுகளை ஏற்படுத்துவதுடன் தொடர்பு கொண்டுள்ளது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்த மருந்து இருதய கோளாறுகளை ஏற்படுத்துவது பற்றி நீண்ட காலம் விவாதிக்கப்பட்டு வந்தது.  இதுபற்றி கடந்த 2012ம் ஆண்டு இந்திய உணவு மற்றும் மருந்து கழகம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.

இதன்படி, இருதய கோளாறுகளுடன் அசித்ரோமைசின் மருந்து தொடர்பு கொண்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.  எனினும், அடுத்தடுத்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் இறுதியில் பல்வேறு முடிவுகளை வெளிப்படுத்தின.

எனினும், சிகாகோ நகரில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவில் சமீபத்தில் அதன் அறிக்கைகளை வெளியிட்டு உள்ளனர்.  இதற்காக கடந்த 2009ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை தனியார் சுகாதார காப்பீட்டு திட்டங்களின்கீழ் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 40 லட்சம் நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளன.  அவர்களில் இருதய பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து கொள்ள சென்றவர்களும் ஆய்வில் உட்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு அமோக்சிசிலின் அல்லது அசித்ரோமைசின் ஆகிய மருந்துகள் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு உள்ளன.  இந்த நிலையில், ஆய்வின் முடிவில், அசித்ரோமைசின் மருந்து இருதய கோளாறுகள் அதிகரிப்பதில் தனிப்பட்ட முறையில் எந்த தொடர்பும் கொண்டிருப்பதில்லை.

ஆனால், வேறு சில மருந்துகளுடன் சேர்த்து எடுத்து கொள்ளும்பொழுது, அது இருதயத்தின் மின் செயல்பாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.  இதனால், இருதய பாதிப்புகள் அதிகரிக்க கூடும் என்று தெரிவித்து உள்ளது.

எங்களது கண்டுபிடிப்புகள் ஆனது, கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க கூடிய ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவர்களை சற்று தயக்கமடைய செய்யும்.  ஏனெனில், வேறு மருந்துகளுடன் சேர்த்து எடுத்து கொள்ளப்படும் இந்த மருந்து, இருதய துடிப்புகளில் பாதிப்பு ஏற்படுத்தும்.  மின்செயல்பாடுகளை பாதிக்கும்.  மயக்கமடைதல், இருதய துடிப்பு அதிகரித்தல் அல்லது ஒழுங்கற்ற துடிப்பு, மாரடைப்பு ஏற்படுதல் உள்ளிட்ட பாதிப்புகளில் 40 சதவீதம் வரை அதிகரிக்க செய்யும் என்று ஆய்வாளர் ஹரிதர்சன் பட்டேல் தெரிவித்து உள்ளார்.

இதனாலேயே, ரத்த அழுத்தத்திற்கான மருந்து எடுத்து கொள்வோர், மனஅழுத்தத்தில் இருந்து விடுபட மருந்து எடுத்து கொள்வோர், மலேரியா நோய் தடுப்பு மருந்துகளான ஹைட்ரோகுளோரோ குயின், குளோரோகுயின், வலி நிவாரண மருந்துகள், தசை தளர்வுகளுக்கான மருந்துகள் ஆகியவற்றை எடுத்து கொள்வோருக்கு இந்த மருந்து, பாதிப்புகளை அதிகரித்து ஆபத்து ஏற்படுத்த கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதனால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அல்லது வேறு எந்த வியாதிகளுக்கும் சிகிச்சை அளிக்கும்பொழுது அசித்ரோமைசின் மருந்து பயன்படுத்துபவர்கள், அவர்கள் மேற்கூறிய மருந்துகளையும் சேர்த்து பயன்படுத்தும்பொழுது அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.  அதனை நன்கு பரிசீலனை செய்து சிகிச்சைக்கு அளிக்க வேண்டும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது என்று பட்டேல் கூறியுள்ளார்.

Next Story