‘மோடி சிறந்த தலைவர், நம்பிக்கையான நண்பர்’ பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து டிரம்ப் புகழாரம்


‘மோடி சிறந்த தலைவர், நம்பிக்கையான நண்பர்’  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து டிரம்ப் புகழாரம்
x
தினத்தந்தி 18 Sep 2020 11:00 PM GMT (Updated: 18 Sep 2020 8:54 PM GMT)

பிரதமர் மோடி சிறந்த தலைவர், நம்பிக்கையான நண்பர் என்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த டிரம்ப் புகழாரம் சூட்டினார்.

வாஷிங்டன், 

பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் நெருக்கமான நண்பர்களாக விளங்குகிறார்கள்.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தபோது அங்கு ஹூஸ்டன் நகரில் செப்டம்பர் 22-ந் தேதி நடந்த ‘ஹவ்டி மோடி’ (மோடி நலமா?) பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அதே போன்று கடந்த பிப்ரவரி மாதம் டிரம்ப் இந்தியா வந்தபோது ஆமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 24-ந் தேதி ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற பெயரில் பிரமாண்ட வரவேற்பு நிகழச்சி நடைபெற்றது. இதில் டிரம்புடன் மோடி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இப்போது கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி பல கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை வழங்கியதும், டிரம்ப் இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை பரிசாக வழங்கியதும் நினைவுகூரத்தக்கது.

இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தனது 70-வது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். அப்போது பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இதையொட்டி அப்போது அவர் வெளியிட்ட பதிவில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 70-வது பிறந்த தின நல்வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். சிறந்த தலைவரும், நம்பிக்கையான நண்பருமான அவர் இது போல பல பிறந்த தினங்களை கொண்டாட வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியின்போது டிரம்ப், மனைவி மெலனியா, பிரதமர் மோடியுடன் கூட்டாக எடுத்துக்கொண்ட படத்தையும் வெளியிட்டு கவுரவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story