உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 25 Sep 2020 9:30 PM GMT (Updated: 25 Sep 2020 7:31 PM GMT)

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள போலீஸ் நிலையத்தில் கைதி ஒருவர் போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

* மத்திய பால்கன் நாடுகளில் ஒன்றான செர்பியாவின் தலைநகர் பெல்கிரேட்டில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற ராணுவ விமானம் ஒன்று திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் அது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.

* இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள போலீஸ் நிலையத்தில் கைதி ஒருவர் போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அதனைத் தொடர்ந்து தப்பி ஓட முயன்ற அந்த கைதியை சக போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

* ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தில் ரஷியாவை பொறுப்பேற்க வைக்கவும் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிக்கவும் வலியுறுத்தும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

* அமெரிக்காவில் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் விசாக்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்தை நிர்ணயிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

* பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 831 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

* லஷ்கர்-இ-தொய்பா உள்பட தனது மண்ணில் செயல்படும் அனைத்து பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டுமென பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் புதிய தூதராக பரிந்துரைக்கப்பட்டுள்ள வில்லியம் டோட் தெரிவித்துள்ளார்.

* பிரான்சில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாட்டில் 2-வது முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Next Story