தாய்லாந்து: மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க சர்ச்சைக்குரிய சட்டத்தை கையில் எடுத்த அரசு


தாய்லாந்து: மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க சர்ச்சைக்குரிய சட்டத்தை கையில் எடுத்த அரசு
x
தினத்தந்தி 25 Nov 2020 10:47 PM GMT (Updated: 25 Nov 2020 10:48 PM GMT)

தாய்லாந்தில் மன்னராட்சிக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு சர்ச்சைக்குரிய சட்டத்தை கையில் எடுத்துள்ளது.

பாங்காக், 

மன்னராட்சி நடக்கும் ஒரு சில நாடுகளில் முக்கியமான நாடு தாய்லாந்து. தாய்லாந்து நாட்டில் நடப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்ட முடியாட்சி மற்றும் மக்களாட்சி. அதாவது அந்நாட்டின் அரசரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரும் அதிகாரங்களைப் பகிர்ந்துகொண்டு ஆட்சி செய்வார்கள்.

2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘பத்தாம் ராமா’ என்றழைக்கப்படும் மகா வஜிரலோங்க்கோர்ன் என்பவர் அந்த நாட்டின் மன்னராக உள்ளார். அதேபோல் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த பிரயுத் சான் ஓச்சா அங்கு பிரதமராக உள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் ஓச்சா பதவி விலக வேண்டும், புதிய அரசியல் சாசன சட்டம் இயற்றப்படவேண்டும், முடியாட்சியில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், குறிப்பாக மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் தொடர்ந்து அறவழியில் போராட்டங்கள் நடத்தி வருகிறது.

மாணவர்களின் பெரிய அளவிலான போராட்டங்களால் நாட்டின் தலைநகரமான பாங்காக் திணறியது. இதையடுத்து மாணவர்களின் போராட்டத்தை தடுக்கிற வகையில் கடந்த மாதம் 15-ந்தேதி தலைநகரம் பாங்காக்கில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

ஆனால் மாணவர்கள் அவசர நிலையையும் மீறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பிரதமர் ஓச்சாவுக்கு தலைவலியாக அமைந்துள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றம் முன்பு நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தியபோது பெரும் வன்முறை வெடித்தது. அதன்பின்னர் கடந்த சில நாட்களாக போராட்டம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்று மாணவர்கள் அமைப்பினர் பாங்காங்கில் பிரமாண்ட பேரணியை நடத்தினர். இதனால் பாங்காக் நகரம் குலுங்கியது.

இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க தாய்லாந்து போலீசார் சர்ச்சைக்குரிய சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். லெஸ் மஜாஸ்ட்டே எனும் இந்த சட்டத்தின்படி அரச குடும்பத்தை எதிர்த்து யார் எந்த கருத்தை சொன்னாலும், அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

அரச குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் இந்த சட்டத்தின்கீழ் ஒருவர் மீது புகார் பதிவு செய்யலாம். எனவே பெரும்பாலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சட்டம் கடந்த சில ஆண்டுகளாக புழக்கத்தில் இல்லாமல் இருந்து வந்தது.

இந்த சட்டத்தின் பயன்பாட்டை காண விரும்பவில்லை என மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் அரசுக்கு அறிவித்த பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக இந்த சட்டத்தின்கீழ் யார் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படாமல் இருந்தது.

இந்த சூழலில்தான் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கான பிரம்மாஸ்திரமாக இந்த சட்டத்தை போலீசார் கையில் எடுத்துள்ளனர். அதன்படி மாணவர்கள் போராட்டக்குழுக்களின் தலைவர்கள் 12 பேர் மீது லெஸ் மஜாஸ்ட்டே சட்டத்தின் கீழ் மன்னராட்சியை இழிவுபடுத்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இந்த தலைவர்கள் 12 பேருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story