கொரோனா தடுப்பூசிகள் பலன் தராமல் போக வாய்ப்புகள் அதிகம் - ரஷிய விஞ்ஞானி எச்சரிக்கை


கொரோனா தடுப்பூசிகள் பலன் தராமல் போக வாய்ப்புகள் அதிகம் - ரஷிய விஞ்ஞானி எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 Dec 2020 3:47 PM GMT (Updated: 2 Dec 2020 3:47 PM GMT)

தாமாகவே இருமுறை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஆய்வு மேற்கொண்ட ரஷிய விஞ்ஞானி ஒருவர், தடுப்பூசிகள் பலன் தராமல் போக வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாஸ்கோ

ரஷிய விஞ்ஞானியான அலெக்சாண்டர் செப்பர்னோவ் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்.தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த அவர், ஆய்வின் பொருட்டு மீண்டும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி கொண்டார். தற்போது தமது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள அவர், கொரோனா பரவல் மீண்டும் ஏற்படலாம் எனவும், தடுப்பூசிகள் பலன் தராமல் போக வாய்ப்புகள் அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் மறுபடியும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாவது தொடர்பில் நாடுகள்  உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள பேராசிரியர் அலெக்சாண்டர் செப்பர்னோவ் ரஷிய நிர்வாகம் இந்த விவகாரம் தொடர்பில் மெத்தனமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். 

அது மட்டுமின்றி, ரஷியாவின் முதன்மை சுகாதார தலைவராக செயல்பட்டுவரும் மருத்துவர் அன்னா போபோவா என்பவரை கடுமையாக விமர்சித்துள்ள பேராசிரியர் செப்பர்னோவ், இந்த விவகாரத்தில் அவர் கண்மூடித்தனமாக செயல்படுகிறார் என கூறினார் . 

கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் மறுபடியும் பாதிப்புக்கு உள்ளாவது, மிகப்பெரிய ஆபத்தின் அறிகுறி என எச்சரித்துள்ள பேராசிரியர் செப்பர்னோவ், இப்போதே அதற்கான ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும் என கூறினார்.  ஆனால் பேராசிரியர் செப்பர்னோவ் வெளியிட்ட ஆய்வறிக்கை தொடர்பில் கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ள போபோவா, பேராசிரியர் செப்பர்னோவ் ஒரு வயதான நபர், அவர் மிக விரைவில் குணமடைய வாழ்த்துகள் என்றார்.

மேலும், இந்த நிலைமையை நாங்கள் ஆராய்ந்தோம், இது உண்மையில் ஒரு மறுபாதிப்பு என்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் போபோவா சுட்டிக்காட்டியுள்ளார்.

Next Story