நேபாளத்தில் பாராளுமன்றம் கலைப்பு: அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல்


Photo Credit: PTI ( FILE)
x
Photo Credit: PTI ( FILE)
தினத்தந்தி 20 Dec 2020 10:36 AM GMT (Updated: 20 Dec 2020 10:36 AM GMT)

நேபாளத்தில் மந்திரிசபையின் பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி, பாராளுமன்றத்தை கலைத்ததுடன், அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

காத்மாண்டு,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கும், முன்னாள் பிரதமர் பிரசண்டாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், கட்சியில் பிரதமருக்கான ஆதரவு குறைந்தது. 

கட்சி மட்டுமின்றி பாராளுமன்றத்திலும் மெஜாரிட்டியை இழந்தார். மேலும், கடந்த செவ்வாய்க்கிழமை பிறப்பித்த அரசியலமைப்பு சபை சட்டம் தொடர்பான அவசர சட்டத்தை திரும்ப பெறுவதற்கான அழுத்தமும் அதிகரித்தது. 

இந்நிலையில் இன்று காலை பிரதமர் சர்மா ஒலி மந்திரிசபை கூட்டத்தை அவசரமாக கூட்டினார். இக்கூட்டத்தில் அதிருப்தி தலைவர்களை சமாதானம் செய்து ஆட்சியை தொடர்வதற்கு பதிலாக, பாராளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்யப்பட்டது. பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. பிரதமர் சர்மா ஒலி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு நேரில் சென்றும் தங்கள் முடிவை தெரிவித்தார்.

இந்த பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன், அடுத்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியில் இருந்து மே 10ம் தேதிக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்ததாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் அடுத்த பொதுத்தேர்தல் 2022ல் நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆளுங்கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுகிறது. 

Next Story