உலக செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்; டிரம்பின் பதவியை பறிக்க ஜனநாயக கட்சியினர் தீவிரம் + "||" + Democrats Move To Impeach Trump In Final Days Of Presidency

அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்; டிரம்பின் பதவியை பறிக்க ஜனநாயக கட்சியினர் தீவிரம்

அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்; டிரம்பின் பதவியை பறிக்க ஜனநாயக கட்சியினர் தீவிரம்
அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தை காரணம் காட்டி ஜனாதிபதி டிரம்பின் பதவியை பறிக்கும் முயற்சிகளில் ஜனநாயக கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் 2-வது முறையாக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்பை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தோற்கடித்தார். 

ஆனால், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பல மாகாணங்களில் வழக்கும் தொடுத்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த சூழலில் ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றளிப்பதற்காக கடந்த 6-ந்தேதி நாடாளுமன்றம் கூடியது.

அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து சூறையாடினர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 5 பேர் பலியாகினர். உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான அமெரிக்காவில் முன்னெப்போதும் நடந்திராத வகையில் அரங்கேறிய இந்த வன்முறை சம்பவம் உலக நாடுகளை முகம் சுளிக்க வைத்தது. 

இந்த வன்முறை சம்பவத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் தான் காரணம் என்றும் அவர் தனது ஆதரவாளர்களை வன்முறைக்கு தூண்டியதாகவும் பல்வேறு தரப்பில் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன. எனவே நாடாளுமன்ற கலவரத்துக்கு பொறுப்பேற்று டிரம்ப் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தினர்.

டிரம்ப்பின் பதவிக்காலம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கு முன்பாக அவரை பதவி நீக்கம் செய்வதில் ஜனநாயக கட்சியினர் தீவிரமாக உள்ளனர். அந்த வகையில் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி சக எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் ‘‘நமது அரசியலமைப்பையும், நமது ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் நாம் அவசர உணர்வுடன் செயல்பட வேண்டும். ஏனென்றால் தற்போதைய ஜனாதிபதி இந்த இரண்டுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளார். எனவே உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் ‘‘முதற்கட்டமாக டிரம்பின் ஜனாதிபதி அதிகாரங்களை பறிக்கும் 25-வது திருத்தத்தை செயல்படுத்த துணை ஜனாதிபதி மைக் பென்சை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றுவோம். இந்த தீர்மானம் வெற்றி பெறாத பட்சத்தில் கிளர்ச்சியை தூண்டும் குற்றச்சாட்டில் டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வருவோம்’’ என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, டொனால்டு டிரம்பை நீக்குவதற்கான 25-வது திருத்தத்தை கொண்டு வரக் கோரும் தீர்மானம் அவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக கட்சியினரால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த தீர்மானத்திற்கு குடியரசுக்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவை ஒத்திவைக்கப்பட்டது. 

இதையடுத்து வாக்கெடுப்புக்காக அவை நாளை மீண்டும் கூட உள்ளது. இதற்கிடையே, மைக் பென்ஸ் செயலாற்ற தவறினால், டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தையும் சில ஜனநாயக கட்சியினர் அவையில் அறிமுகம் செய்துள்ளனர்.  டிரம்ப் கிளர்ச்சியை தூண்டும் வகையில் செயல்பட்டதாக ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டி இந்த தீர்மானத்தை அறிமுகம் செய்துள்ளனர். 

இதனிடையே டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் சபை எம்.பி.க்கள் பலரும் டிரம்ப் உடனடியாகப் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். டிரம்பின் சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிரான விமர்சனங்கள் குறித்து அவரால் பொதுவெளியில் உடனுக்குடன் கருத்து தெரிவிக்க முடியாத நிலை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 20-ந்தேதி புதிய அதிபராக ஜோபைடன் பதவி ஏற்க உள்ளார். எனவே டிரம்பின் பதவிக்காலம் முடிய இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் பதவியை பறித்து விட ஜனநாயக கட்சியினர் முயற்சிக்கிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உச்ச கட்ட உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2. வன்முறையில் யாரும் ஈடுபடக்கூடாது: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிக்கை
அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடம் (கேபிடல்) தாக்கப்பட்டதற்கு டிரம்ப் தான் காரணம் என குற்றம்சாட்டி அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.