உலகம் முழுவதும் 60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது - உலக சுகாதார நிறுவனம் தகவல்


உலகம் முழுவதும் 60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது - உலக சுகாதார நிறுவனம் தகவல்
x
தினத்தந்தி 20 Jan 2021 5:51 AM GMT (Updated: 20 Jan 2021 5:51 AM GMT)

உலகம் முழுவதும் 60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெனீவா,

பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தடை செய்துள்ளன. அத்துடன், சமீபத்தில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள், பிரிட்டனில் இருந்து வேறு நாடுகள் வழியாக வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. 

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா தான் பரவியுள்ளதா? என்பதை கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் 100-க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஒரே அறையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் அவர்களுடன் ஒரே விமானத்தில் வந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு தொடர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.உருமாறிய இந்த கொரோனாவால் ஏற்படும் சூழல்களை எதிர்கொள்ள மாநிலங்கள் தயாராக இருக்குமாறு மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் உலகின் 60 நாடுகளில்  உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், “பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் தற்போது 60 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்என்றும் சமூக இடைவெளியை உலக நாடுகள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Next Story