தேசபக்தர் என்ற பெயரில் டொனால்டு டிரம்ப் புதிய கட்சியை தொடங்க திட்டம் என தகவல்


தேசபக்தர் என்ற பெயரில் டொனால்டு டிரம்ப் புதிய கட்சியை தொடங்க திட்டம் என தகவல்
x
தினத்தந்தி 20 Jan 2021 1:04 PM GMT (Updated: 20 Jan 2021 1:04 PM GMT)

அமெரிக்காவில் தேசபக்தர் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்குவது குறித்து டிரம்ப் யோசிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் தேசபக்தர் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்குவது குறித்து டிரம்ப் யோசிப்பதாக தகவல்கள் வெளியாகியது. அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவியதும் டொனால்டு டிரம்ப் முன்வைத்த மோசடி குற்றச்சாட்டுக்கு குடியரசு கட்சியை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. 

மாறாக பலரும் டிரம்பின் செயல்களை விமர்சித்தனர். இந்தநிலையில் ஜனவரி 6 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் டிரம்ப் பேச்சால் அவருடைய ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்ட விவகாரம் சொந்த கட்சியினரின் அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செய்தது.குடியரசு கட்சியை சேர்ந்த மெக்கனல் கலவரத்திற்கு டிரம்ப் பொறுப்பு ஏற்க வேண்டும் என விமர்சனம் செய்தார். 

இதுபோன்ற காரணங்களால் டிரம்புக்கு பல்வேறு குடியரசு கட்சி தலைவர்களுடன் சுமுக உறவு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்தநிலையில் தனியாக தேசப்பக்தர் என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கி விட டிரம்ப் யோசித்து வருகிறார் என அவருக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து நெருங்கிய வட்டாரங்களுடன் ஆலோசனையை அவர் மேற்கொண்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தொழில் அதிபரான டிரம்புக்கு புதிய கட்சியை தொடங்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரையில் இருகட்சி ஆட்சி முறையே நிலவி வருகிறது. 

இந்நிலையில், மூன்றாவதாக ஒரு கட்சியை நிறுவுவது என்பது அவருக்கு ஒரு சவாலான பணியாகவே இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Next Story