அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி: இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு


அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி: இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
x
தினத்தந்தி 23 Jan 2021 12:59 PM GMT (Updated: 23 Jan 2021 12:59 PM GMT)

அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்கியதற்காக இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

ஜெனீவா,

கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு கடந்த 3-ந் தேதி இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 16-ந் தேதி 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடுகிற உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 1 கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2 கோடி முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்தியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில்,  இந்தியாவின் நட்பு நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம் மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 20-ஆம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி மியான்மர் நாட்டிற்கு நேற்று (ஜன.22) விமானம் மூலம் 15 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. அதற்கு முன்பு வங்கதேசத்திற்கு 20 கோடி கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன.

மேலும், பூடான், மாலத்தீவு மற்றும் நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுக்கும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த செயலுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் அதானோம் கெப்ரேயஸ், கூறியதாவது:

கொரோனாவுக்கு எதிரான போரில் தொடர்ந்து பங்காற்றி வரும் இந்தியா மற்றும் அதன் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.

அறிவை பகிர்ந்து நாம் ஒன்றாகச் செயல்பட்டால் மட்டுமே வைரஸை கட்டுப்படுத்த இயலும். இதன்மூலம் பலரது வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் காக்கப்படும் என்று கூறினார்.

Next Story