அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் - உத்தரவுகளை பிறப்பித்தார் ஜோ பைடன்


அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் - உத்தரவுகளை பிறப்பித்தார் ஜோ பைடன்
x
தினத்தந்தி 27 Jan 2021 10:41 PM GMT (Updated: 27 Jan 2021 10:41 PM GMT)

அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் தொடர்பான நிர்வாக உத்தரவுகளை ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நீண்டகாலமாக இன ரீதியிலான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக கருப்பின மக்கள் அதிக அளவில் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட்(வயது 46) என்ற கருப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ்காரர், பிளாய்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து ஜார்ஜ் பிளாய்ட்டின் சாவுக்கு நீதி கேட்டும் இனவெறிக்கு எதிராகவும் தலைநகர் வாஷிங்டன் உட்பட அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்தது.மேலும் இந்தப் போராட்டம் அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் எதிரொலித்தது.‌

இந்தப் போராட்டம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.‌ மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியினர் ஜார்ஜ் பிளாய்ட் விவகாரத்தை சுட்டிக்காட்டி டிரம்புக்கு எதிராக பிரசாரம் செய்தனர்.

அது மட்டுமின்றி தேர்தலில் டிரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவில் நீண்டகாலமாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைத்து இன சமத்துவத்தை உருவாக்க பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் கடந்த 20 ந் தேதி அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து தேர்தலின்போது தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக அவர் பல நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.‌

அந்த வகையில் அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைத்து இன சமத்துவத்தை ஏற்படுத்துவது தொடர்பான 4 நிர்வாக உத்தரவுகளில் ஜோ பைடன் நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். அதன்பிறகு ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது இனவெறிக்கு எதிரான புதிய நிர்வாக உத்தரவு குறித்து அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி தேர்தலுக்கான எனது பிரசாரத்தில் அமெரிக்கா ஆழ்ந்த இன ஏற்றத்தாழ்வுகளையும் கடுமையான இன வெறியையும் எதிர்கொள்ளும் ஒரு தேசமாக மாறியிருப்பதை நான் மிகவும் தெளிவு இது நம் தேசத்தை மிக நீண்டகாலமாக பாதித்துள்ளது.‌

வெளிப்படையாக கூறினால் இந்த தேசத்தின் கொள்கைகளுக்கு நாம் ஒருபோதும் முழுமையாக வாழ்ந்ததில்லை. எல்லா மக்களும் சமமாக உருவாக்கப்படுகிறார்கள்.‌ அவர்களின் வாழ்நாள் முழுவதும் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை உண்டு.‌ எனவே இது நாம் செயல்பட வேண்டிய நேரம். சரியான செயல் என்பதோடு மட்டுமல்லாமல் நாம் இதை செய்தால் நாம் அனைவரும் அதற்கு சிறந்தவர்களாக இருப்போம். இனவெறியை வேரறுக்க முதல் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாகவும் சமத்துவமின்மையை வேரறுக்க தைரியமான மற்றும் லட்சிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு அமெரிக்க கனவை நனவாக்குவதற்கான எனது நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை தெரிவிக்கிறேன்.

ஒற்றுமையும் நற்குணமும் புரிதலுடனும் உண்மையுடனும் தொடங்கவேண்டும் அறியாமை மற்றும் பொய்களால் அல்ல.

இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.

Next Story