அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் வழக்கு


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் வழக்கு
x
தினத்தந்தி 10 March 2021 10:01 AM GMT (Updated: 10 March 2021 10:01 AM GMT)

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

வாஷிங்டன்,

கடந்த 2015-ம் ஆண்டு பாரிஸ் நகரில் பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது. பல்வேறு நாடுகளின் பிரநிதிகள் இந்த ஒப்பந்தத்தில் இணைந்ததன் மூலம் புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. 

வரலாற்று சிறப்புமிக்க இந்த பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் ஒபாமா ஆட்சியின் கீழ் அமெரிக்கா முதல் நாடாக இணைந்தது. ஆனால் அதன் பின்னர் ஆட்சி பொறுப்புக்கு வந்த டிரம்ப், இந்த ஒப்பந்தம் வளரும் நாடுகளுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இதனை காரணம் காட்டி கடந்த 2017-ம் ஆண்டு பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அவர் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டின் இறுதியில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா முறைப்படி வெளியேறியது.

இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன், தனது தேர்தல் பிரசாரத்தின் போதே, தான் தேர்தலில் வெற்றி பெற்றால் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என உறுதி அளித்தார். அதன்படியே அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான நிர்வாக உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 19-ந்தேதி பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா முறைப்படி மீண்டும் இணைந்தது.

இந்தநிலையில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்ததன் மூலம் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படும் என கூறி அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் மீது 12 மாகாண அரசுகள் கூட்டாக வழக்கு தொடர்ந்துள்ளன. ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது நிர்வாகத்துக்கு எதிராக மாகாண அரசுகள் தொடர்ந்துள்ள வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story