ஜோ பைடன் பதவியேற்புக்கு பின் அமெரிக்கா-சீனா இடையே முதல் நேரடி பேச்சுவார்த்தை


ஜோ பைடன் பதவியேற்புக்கு பின் அமெரிக்கா-சீனா இடையே முதல் நேரடி பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 19 March 2021 2:31 PM GMT (Updated: 19 March 2021 2:31 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு அமெரிக்கா-சீனா இடையே முதல் நேரடி பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.

இரு நாடுகளின் உறவு மோசம்

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.அதிலும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் 4 ஆண்டு கால பதவி காலத்தில் சீனாவுடனான அமெரிக்காவின் உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்தது.

இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் தொடங்கியது இந்த பிரச்சினை. அதன் பின்னர் தென் சீன கடல் விவகாரம், உய்கூர் இன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள், ஹாங்காங்கின் ஜனநாயகத்தை பறிக்கும் செயல்பாடுகள் போன்றவற்றில் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாடு இரு நாடுகளின் உறவை மேலும் பலவீனமாக்கியது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று கொரோனா வைரஸ் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே தீரா பகையை உருவாக்கியது.

முதல் நேருக்கு நேர் சந்திப்பு

இந்த நிலையில் அமெரிக்காவில் தற்போது ஜோ பைடன் தலைமையில் புதிய நிர்வாகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த புதிய நிர்வாகத்தின் கீழ் இரு நாடுகளின் உறவில் இணக்கமான சூழலை ஏற்படுத்த சீனா விரும்புகிறது. எனினும் சீனாவுடனான பிரச்சினைகளில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் கையாண்ட கடுமையான போக்கையே ஜோ பைடனின் நிர்வாகம் தொடர்ந்து வருகிறது.‌

இந்த நிலையில் ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அமெரிக்கா மற்றும் சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் இடையே ‘நேருக்கு நேர்’ பேச்சுவார்த்தை நடந்தது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஏங்கரேஜ் நகரில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்‌ மற்றும் சீனாவின் வெளியுறவுக் கொள்கை அதிகாரி யாங் ஜீச்சி மற்றும் வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோருக்கு இடையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

பரஸ்பர குற்றச்சாட்டு பரிமாற்றம்

இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு அதிகாரிகளும் பரஸ்பர குற்றச்சாட்டுகளையும் கண்டனங்களையும் பரிமாறிக்கொண்டனர்.‌ இதனால் இது ஒரு மோசமான பேச்சுவார்த்தையாகவே அமைந்தது.

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தனது தொடக்க உரையில் ‘‘ஜின்ஜியாங், ஹாங்காங் மற்றும் தைவானில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் அமெரிக்கா மீதான சைபர் தாக்குதல்கள், எங்கள் நட்பு நாடுகள் மீதான பொருளாதார அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட சீனாவின் நடவடிக்கைகளுடன் அமெரிக்கா தனது ஆழ்ந்த கவலைகள் பற்றி விவாதிக்கும்’’ என்றார்.

தொடர்ந்து அவர் ‘‘இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையை பராமரிக்கும் விதிகள் சார்ந்த ஒழுங்கை அச்சுறுத்துகின்றன. அவை வெறுமனே உள் விவகாரங்கள் அல்ல. அதனால்தான் இந்த பிரச்சினைகளை இன்று இங்கே எழுப்ப வேண்டியதை கடமையாக நாங்கள் உணர்கிறோம்’’ எனவும் கூறினார்.

ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லை

அதற்கு பதிலளித்த சீன வெளியுறவு மந்திரி வாங் யி ‘‘அமெரிக்கா தனது ராணுவ வலிமையையும் நிதி மேலாதிக்கத்தையும் மற்ற நாடுகளை அடக்குவதற்கு பயன்படுத்துகிறது’’ என குற்றம்சாட்டினார்.

‘‘இது சாதாரண பாதுகாப்பு பரிமாற்றங்களை தடுக்க தேசிய பாதுகாப்பு என்ற கருத்துகளை துஷ்பிரயோகம் செய்கிறது. இதன்மூலம் சீனாவை தாக்க அமெரிக்கா சில நாடுகளை தூண்டுகிறது’’’ என்று அவர் மேலும் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் ‘‘அமெரிக்காவில் மனித உரிமைகள் மிக குறைந்த நிலையில் உள்ளன. கருப்பின அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அமெரிக்கா தனது சொந்த மனித உரிமை பிரச்சினைகளைக் கையாள்வதில் தோல்வியுற்றது. அமெரிக்காவிற்குள் உள்ள பலருக்கு உண்மையில் அமெரிக்காவின் ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லை’’ என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ‘‘அமெரிக்கா சீனாவுடன் மோதலை தேடவில்லை’’ என்று கூறினார். அதே சமயம் ‘‘நாங்கள் எங்கள் மக்களுக்காகவும் எங்கள் நண்பர்களுக்கும் எங்கள் கொள்கைகளுக்கு எப்போதும் துணை நிற்போம்’’ என்று அவர் குறிப்பிட்டார்.

 


Next Story