20 நாட்களாக மழைநீர் குழாயில் சிக்கி தவித்த பெண் நிர்வாண நிலையில் மீட்பு


20 நாட்களாக மழைநீர் குழாயில் சிக்கி தவித்த பெண்  நிர்வாண நிலையில் மீட்பு
x
தினத்தந்தி 25 March 2021 3:05 PM GMT (Updated: 25 March 2021 3:05 PM GMT)

அமெரிக்காவின் புளோரிடாவில் 20 நாட்களாக மழைநீர் குழாயில் தவித்த பெண் நிர்வாண நிலையில் மீட்பு

புளோரிடா

அமெரிக்காவின் புளோரிடாவில் மழைநீர் குழாய்க்குள் 20 நாட்களாக சிக்கியிருந்த ஒரு பெண், உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம்  நிகழ்ந்துள்ளது.கடந்த செவ்வாயன்று சாலையோரமாக அமைந்திருந்த மழைநீர் வடிகுழாயிலிருந்து யாரோ உதவி கோரி சத்தமிடுவதை கவனித்த அந்த வழியாக சென்ற ஒருவர், போலீசாருக்கு தகவல் கொடுந்தார். 

தீயணைப்பு வீரர்களுடன் விரைந்துவந்த போலீசார், அந்த மழைநீர் வடிகுழாய்க்குள் பெண் ஒருவர் சிக்கியிருந்ததைக் கண்டு, அவரை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.வெகு நேர போராட்டத்திற்குப் பின், நிர்வாண நிலையிலிருந்த பெண்ணை அவர்கள் பத்திரமாக மீட்டனர்.

அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் கூறிய தகவல்களைக் கேட்டு தீயணைப்பு வீரர்களே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். 

அந்த பெண்ணின் பெயர் லிண்ட்சே கென்னடி (43). மார்ச் 3ஆம் தேதி கால்வாய் ஒன்றில் நீந்தச் சென்று உள்ளார்.  கால்வாய்க்குள் ஒரு சுரங்கப்பாதை போன்ற அமைப்பைக் கண்டு அதைப் பார்க்கச் சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்து திரும்ப வர அவருக்கு வழி தெரியவில்லை.

அந்த சுரங்கப்பாதை வழியாக பாதாள சாக்கடை ஒன்றிற்குள் சென்ற லிண்ட்சே அங்கு சுமார் 20 நாட்கள் செலவிட்டுள்ளார். கடைசியாக, மழைநீர் வடிகுழாய் ஒன்றிலிருந்து வெளிச்சம் வருவதைக் கண்ட லிண்ட்சே, அங்கிருந்து சத்தம்போட்டால்  யாருக்காவது கேட்கலாம் என்று எண்ணி, அந்த மழைநீர் வடிகுழாய்க்குள் சென்று அமர்ந்திருக்கிறார்.

அவர் நம்பியது போலவே, அந்தப் பக்கமாக யாரோ வருவதைக் கண்ட லிண்ட்சே சத்தமிட, அதைக் கேட்ட ஒருவர் போலீசாருக்கு தகவலளிக்க, தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு உள்ளனர். பொதுவாக மழைநீர் வடிகுழாய்க்குள்ளிருந்து பூனை, நாய் போன்ற விலங்குகளைத்தான் மீட்பதுண்டு என்று கூறும் தீயணைப்பு வீரர்கள், லிண்ட்சே  அந்த அபாயகராமான சூழலில் எப்படி 20 நாட்கள் செலவிட்டார் என ஆச்சரியப்படுகிறார்கள். லிண்ட்சேவுக்கு சிறிது மன நல பிரச்சினையும் உள்ளது என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

Next Story