வங்காளதேச சகோதர சகோதரிகளுக்கு மேட் இன் இந்தியா தடுப்பூசி: பிரதமர் மோடி மகிழ்ச்சி


வங்காளதேச சகோதர சகோதரிகளுக்கு மேட் இன் இந்தியா தடுப்பூசி:  பிரதமர் மோடி மகிழ்ச்சி
x
தினத்தந்தி 26 March 2021 12:54 PM GMT (Updated: 26 March 2021 12:54 PM GMT)

வங்காளதேச சகோதர சகோதரிகள் மேட் இன் இந்தியா தடுப்பூசிகளை பயன்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

டாக்கா,

வங்காளதேச மக்கள் இன்று 50வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். கடந்த 1971ம் ஆண்டு நடந்த வங்காளதேச விடுதலை போரில் வங்காளதேசத்தின் முக்தி வாகினி படையுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் போரிட்டது.

இந்நிலையில் 2 நாள் பயணமாக இன்று வங்காளதேசத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள தேசிய போர் நினைவிடத்திற்கு சென்றார். கொரோனா பரவ தொடங்கிய பிறகு அவர் கடந்த ஓராண்டாக எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. வங்காளதேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்ததையடுத்து இன்று அவர் வங்காளதேசத்திற்கு சென்றார்.

இன்று காலை வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு தனி விமானம் மூலம் சென்ற பிரதமர் மோடியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். இதனை தொடர்ந்து வங்காளதேசத்தின் தேசிய போர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர், 2020ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதை வங்காளதேச நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரகுமானின் இளைய மகள் ஷேக் ரெஹானாவிடம் பிரதமர் மோடி வழங்கினார்.  இதன்பின்பு பேசிய பிரதமர் மோடி, ஷேக் முஜிபுர் ரகுமானுக்கு காந்தி அமைதி விருது வழங்கி கவுரவிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருப்பது இந்தியர்களாகிய எங்களுக்கு கிடைத்த பெருமை. 

வங்காளதேச சகோதர சகோதரிகளுடன் தோள் கொடுத்து நின்ற இந்திய ராணுவத்தின் வீரமிகு வீரர்களை இந்நேரத்தில் நான் வணங்குகிறேன்.  வங்காளதேச விடுதலை போரில் பங்கு கொண்ட பல இந்திய வீரர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

வங்காளதேசத்தில், சொந்த நாட்டு விடுதலைக்காக போரிட்டவர்களின் ரத்தம் மற்றும் இந்திய வீரர்களின் ரத்தம் கலந்து ஓடுகிறது.  இதில் உருவான உறவை எந்தவித அழுத்தமும் பிரிக்க முடியாது.  எந்தவித ராஜதந்திரத்திற்கும் அது இரையாகாது.

வங்காளதேச சகோதர சகோதரிகள் மேட் இன் இந்தியா தடுப்பூசிகளை பயன்படுத்தியதில் இந்தியா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Next Story