இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 8 பேர் பலி என தகவல்


இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 8 பேர் பலி என தகவல்
x
தினத்தந்தி 10 April 2021 8:52 PM GMT (Updated: 10 April 2021 8:52 PM GMT)

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர்.

ஜகார்த்தா,

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது.

இதனால் அங்கு நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

இந்த நிலையில் அந்த நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மலாங் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாக பதிவான‌ இந்த பயங்கர நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 82 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் மலாங் நகரம் முழுவதும் கடுமையாக உணரப்பட்டது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஜாவாவின் லுமாஜாங், மலாங் மாவட்டங்களில் 8 பேர் பலியாகினர். 23 பேர் காயமடைந்தனா். இரு மாவட்டங்களிலுமாக 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தால் பாறை உருண்டுவந்து, மலைப்பாதையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தம்பதி மீது விழுந்ததில், அந்தப் பெண் உயிரிழந்ந்தார் அவருடைய கணவா் பலத்த காயமடைந்தார்.

'கடலுக்குக் கீழே நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், அதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை; எனினும் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன; எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story