இந்திய கடல் பகுதிக்குள் போர்க் கப்பல் சட்டப்படி தான் நுழைந்தது - அமெரிக்கா


இந்திய கடல் பகுதிக்குள் போர்க் கப்பல் சட்டப்படி தான் நுழைந்தது - அமெரிக்கா
x
தினத்தந்தி 11 April 2021 12:34 AM GMT (Updated: 11 April 2021 12:34 AM GMT)

இந்திய கடல் பகுதிக்குள் எங்கள் போர்க் கப்பல் சட்டப்படி தான் நுழைந்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க கடற்படையின் 'ஜான் பால் ஜோன்ஸ்' என்ற போர்க்கப்பல் சமீபத்தில் அரபிக் கடலில் லட்சத் தீவுகள் அருகே ரோந்து வந்தது.

இந்தியாவின் பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்திற்குள் அனுமதியின்றி போர்க் கப்பல் வந்ததை கண்டித்து, வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக, துாதரக ரீதியில் அமெரிக்க அரசிடம் கவலை தெரிவித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையக செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:

அமெரிக்க போர்க் கப்பல் சர்வதேச கடல் சட்டத்தின்படி தான் அதன் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டது. இதற்கு இந்தியாவின் முன் அனுமதி தேவையில்லை. கடல் பகுதியில் எங்களுக்கு உள்ள உரிமை, சுதந்திரம் மற்றும் சட்டத்தின்படியே தான் நாங்கள் செயல்பட்டுள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க கடற்படை வெளியிட்ட முந்தைய அறிக்கையில், லட்சத்தீவில் இருந்து 130 கடல் மைல் தொலைவில் உள்ள இந்தியாவின் பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்தில் நுழைய சர்வதேச கடல் சட்ட ஒப்பந்தப்படி முன் அனுமதி தேவையில்லை' என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story