துபாயில், 3 ஆண்டுகளுக்கு வாடகை உயர்வு ரத்து நிலத்துறையின் சார்பில் புதிய சட்ட வரைவு தாக்கல்


துபாயில், 3 ஆண்டுகளுக்கு வாடகை உயர்வு ரத்து நிலத்துறையின் சார்பில் புதிய சட்ட வரைவு தாக்கல்
x
தினத்தந்தி 14 April 2021 9:59 AM GMT (Updated: 14 April 2021 9:59 AM GMT)

துபாயில், 3 ஆண்டுகளுக்கு வாடகை உயர்வு ரத்து செய்ய நிலத்துறையின் சார்பில் புதிய சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

துபாய்,

துபாயில், 3 ஆண்டுகளுக்கு வாடகை உயர்வு ரத்து செய்ய நிலத்துறையின் சார்பில் புதிய சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் நிலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாடகை உயர்வு ரத்து

துபாயில் நிலம் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துகள் மீதான செயல்பாடுகள், பரிமாற்றங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தும் நிலத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதில் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி மற்றும் உறுதித்தன்மையை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க புதிய சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டவரைவில் 3 ஆண்டுகளுக்கு துபாயில் வாடகை உயர்வு ரத்து செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு வாடகை உயர்வு இருக்காது. இதன் மூலம் துபாய் நகரில் சொத்தின் உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களுக்கு இடையே வரும் பிரச்சினைகள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாடகைதாரர் பிரச்சினை குறையும்

இந்த வாடகை ரத்து சட்ட வரைவிற்கு நிர்வாக கவுன்சிலில் ஒப்புதல் அளிக்கப்பட்டால் ரியல் எஸ்டேட் சந்தையில் உறுதித்தன்மையை அளிக்கும். அதேபோல் துபாயில் உள்ள சொத்துகளின் சரியான மதிப்பை வழங்க பயனுள்ளதாக இருக்கும்.

3 ஆண்டுகளுக்கு வாடகை தொகையை அதிகரிக்காமல் இருப்பது உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களுக்கு இடையே நிலவும் பிரச்சினைகளை குறைக்கும். அதுமட்டுமல்லாமல் இருவருக்கும் தெளிவான பதிலை அளிப்பதாக இருக்கும்.

இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ரியல் எஸ்டேட் சந்தையை உறுதிப்படுத்துவதுடன் அதன் மீதான நம்பிக்கையை அதிகரித்து புதிய முதலீடுகளுக்கு வழி வகுக்கும். இந்த சட்ட வரைவானது ஒப்புதலுக்கு பிறகே புதிய வாடகை ஒப்பந்தத்திற்கு பொருந்துமா? அல்லது ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கும் பொருந்துமா? என்பது தெரிய வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story