ஈராக்: அமெரிக்க படைத்தளம் அமைந்துள்ள விமானநிலையத்தில் ராக்கெட் தாக்குதல்


ஈராக்: அமெரிக்க படைத்தளம் அமைந்துள்ள விமானநிலையத்தில் ராக்கெட் தாக்குதல்
x
தினத்தந்தி 14 April 2021 10:01 PM GMT (Updated: 14 April 2021 10:01 PM GMT)

ஈராக்கில் அமெரிக்க படைத்தளம் அமைந்துள்ள விமானநிலையத்தை குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் ராக்கெட் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பாக்தாத்,

ஈரான் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துதல், ஐ.எஸ்., அல்கொய்தா பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஈராக் நாட்டில் அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க படையினர் ஈராக் நாட்டில் படைத்தளங்களை அமைத்து அங்கிருந்தவாறு ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. 

இதற்கிடையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினரை குறிவைத்து ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன.

இந்நிலையில், ஈராக் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமான குர்திஷ்தானில் உள்ள எர்பில் நகரில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தின் ஒருபகுதியில் அமெரிக்க படையினர் படைத்தளம் அமைந்துள்ளது. அந்த படைத்தளத்தை குறிவைத்து ஏர்பில் சர்வதேச விமான நிலையம் மீது இன்று ஆளில்லா விமானம் மூலம் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ராக்கெட் தாக்குதல் ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்களால் நடத்தப்பட்டது என குர்திஷ்தான் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Next Story