கொரோனாவை சமாளிக்க இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய ஜோ பைடன் உத்தரவு - இடைக்கால தூதரும் டெல்லி விரைவு


கொரோனாவை சமாளிக்க இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய ஜோ பைடன் உத்தரவு - இடைக்கால தூதரும் டெல்லி விரைவு
x
தினத்தந்தி 2 May 2021 3:40 PM GMT (Updated: 2 May 2021 3:40 PM GMT)

இந்தியா கொரோனா வைரஸ் தொற்றைக் கையாள்வதற்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்க ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

வாஷிங்டன், 

கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான முதல் நாடு அமெரிக்கா. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஆனால் இந்தியாவில் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த சூழலில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு தனது நிர்வாகத்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பைடனின் ஆசிய கொள்கைகளை வழிநடத்தும் மூத்த அதிகாரி கர்ட் காம்பெல் கூறியதாவது:-

இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுங்கள் என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

என்னையும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் சகா சுமனோ குகாவையும் இந்தியாவுக்கான நிவாரண பொருட்கள் செல்லும் விமானத்தை வழியனுப்புவதற்காக டல்லசுக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசும்போது, கடந்த ஆண்டு அமெரிக்கர்கள் கொரோனாவால் மிகுந்த பாதிப்புக்குள்ளானபோது உதவிய முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று நினைவுகூர்ந்தார்.

அவர்கள் நமக்கு உதவினார்கள். இந்த நேரம் நாமும், நமது அரசும், ஏன் தனியார் துறையும் கூட இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்று ஜோ பைடன் கூறி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுமனோ குகா கூறும்போது, “இந்தியா கேட்ட ஆக்சிஜன், சோதனைக்கருவிகள், பி.பி.இ. கருவிகள் (சுய பாதுகாப்பு கவசங்கள்) ஆகியவற்றை வழங்க பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கிறது” என குறிப்பிட்டார்.

மற்றொரு மூத்த அதிகாரியான ஜெரேமி கோனின்டிக் கூறுகையில், “டல்லஸ் விமான நிலையத்தில் இருந்து இந்தியா செல்லும் விமானம் ஆக்சிஜன் சிலிண்டர்கள், என்-95 முக கவசங்கள் மற்றும் பிற பொருட்களையும் அனுப்பி உள்ளோம்” என்றார்.

டல்லஸ் விமான நிலையத்தில் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்து கூறுகையில், “ஜனாதிபதி ஜோ பைடன் தொடங்கி நிர்வாகத்தில் அனைவரும் உதவுகின்றனர். இந்தியாவுடன் அமெரிக்கா தோளோடு தோள் நின்று உதவும். நாங்கள் அதைப் பாராட்டுகிறோம்” என குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் இருந்து உதவிப்பொருட்களின் 2 விமானங்கள் டெல்லி வந்து சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து அமெரிக்க வர பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு உதவும் முயற்சிகளை வழிநடத்துவதற்காக இடைக்கால தூதராக டேனியல் ஸ்மித் டெல்லிக்கு விரைவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இவர் அமெரிக்க வெளியுறவுத்துறையில் உயர் அதிகாரி ஆவார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவி காலியாக இருப்பது நினைவுகூரத்தக்கது.

Next Story