கனடாவில் மூடப்பட்ட பள்ளிக்கூடத்தில் 213 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு


கனடாவில் மூடப்பட்ட பள்ளிக்கூடத்தில் 213 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 29 May 2021 5:39 PM GMT (Updated: 29 May 2021 5:39 PM GMT)

கனடாவில் மூடப்பட்ட பள்ளிக்கூடத்தில் 213 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்பு பள்ளிக்கூடங்கள்

கனடாவில் 19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் குடியிருப்பு பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட்டு வந்தன. பழங்குடியின இளைஞர்களை வலுக்கட்டாயமாக ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் காலனித்துவ அரசு மற்றும் மத அமைப்புகளால் நடத்தப்பட்டு வந்த இந்த பள்ளிக்கூடங்கள் கட்டாய உறைவிட பள்ளிகளாக இருந்தன. பழங்குடியின சிறுவர்களை அவர்களின் குடும்பத்திடம் இருந்து பிரித்து பள்ளியிலேயே தங்க வைத்து கல்வி கற்பிப்பது தான் இந்த குடியிருப்பு பள்ளிக்கூடங்களின் பணியாக இருந்தது.1863 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பழங்குடியின சிறுவர்கள் அவர்களது குடும்பத்தில் இருந்து பிரிக்கப்பட்டு குடியிருப்பு பள்ளிகளில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டனர்.இந்த பள்ளிகளில் பழங்குடியின மாணவர்கள் தங்களின் மொழியை பேசுவதற்கும், தங்களுடைய கலாசாரத்தை பின்பற்றுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாலியல் வன்முறை மற்றும் பிற கொடுமைகள்

அதுமட்டுமின்றி பாலியல் வன்முறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பிற கொடுமைகளை அவர்கள் அனுபவித்து வந்துள்ளனர்.இந்த சூழலில் சர்ச்சைக்குரிய இந்த கல்வி முறையின் தாக்கம் குறித்து விசாரிக்க கடந்த 2008-ம் ஆண்டு சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் தனது விசாரணை அறிக்கையில் வலுக்கட்டாயமாக குடியிருப்பு பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட ஏராளமான பழங்குடியின சிறுவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பவில்லை என தெரிவித்தது.இதையடுத்து 2008-ம் ஆண்டு கனடா அரசு சர்ச்சைக்குரிய இந்த கல்வி முறை தொடர்பாக மன்னிப்பு கேட்டுக் கொண்டது.இதனிடையே கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்கம் என்கிற அமைப்பு இந்தக் கல்விமுறை குறித்து ஆய்வு மேற்கொண்டது.இது தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு வந்த அமைப்பு தாக்கல் செய்த அறிக்கையில் தற்போது வரை, குடியிருப்பு பள்ளி கூடங்களில் படித்த 4,100 சிறுவர்கள் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது ஒரு கலாசார படுகொலை என்றும் குறிப்பிட்டது.

213 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்

இந்த நிலையில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள முன்னாள் குடியிருப்பு பள்ளிக்கூடமான கம்லூப்ஸ் இந்தியன் ரெசிடென்ஷியல் பள்ளியில் 213 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.‌1890-ல் ரோமன் கத்தோலிக்க நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட இந்த கம்லூப்ஸ் இந்தியன் ரெசிடென்ஷியல் பள்ளி குடியிருப்பு பள்ளிக்கூட கல்வி முறையில் மிக முக்கியமான பள்ளிக்கூடமாக இருந்து வந்தது. 1950-களில் இந்த பள்ளிக்கூடத்தில் 500-க்கும் அதிகமான மாணவர்கள் படித்ததாக கூறப்படுகிறது.1969-ம் ஆண்டில் இந்த பள்ளிக்கூடம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து அது உள்ளூர் மாணவர்களுக்கான தங்கும் இடமாக மாற்றப்பட்டது. பின்னர் 1978-ம் ஆண்டு இந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டது.இந்தநிலையில் இந்த பள்ளிக்கூடத்தில் தரையில் ஊடுருவக்கூடிய ரேடார் கருவியின் உதவியோடு ஆய்வு நடத்தியதில் பள்ளிக்கூடத்துக்குள் புதைக்கப்பட்ட 213 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

பிரதமர் வேதனை

இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் சிறுவர்களின் இறப்புக்கான காரணங்கள் குறித்தும் இறப்பின் காலம் குறித்தும் அறிய தொல்பொருள் ஆய்வாளர்களின் உதவியோடு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதுபற்றி அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்த செய்தியை அறிந்து எனது மனம் உடைந்து போனது.  நம்முடைய நாட்டின் வரலாற்றில் கருப்பு அத்தியாயம்.  வலியை உண்டு பண்ணும் நினைவூட்டல் இது’’ என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

 


Next Story