துபாயில், எக்ஸ்போ 2020 உலக கண்காட்சிக்கான டிக்கெட் விலை வெளியீடு


துபாயில், எக்ஸ்போ 2020 உலக கண்காட்சிக்கான டிக்கெட் விலை வெளியீடு
x
தினத்தந்தி 1 July 2021 11:00 PM GMT (Updated: 1 July 2021 11:00 PM GMT)

துபாயில் நேற்று எக்ஸ்போ 2020 உலக கண்காட்சிக்கான டிக்கெட் விலை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் வருகிற 18-ந் தேதி முதல் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி அதிகாரிகள் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:-

எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி

துபாயில் வருகிற அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு (2022) மார்ச் 31-ந் தேதி வரை 6 மாதங்களுக்கு பிரமாண்டமான எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த உலக கண்காட்சியை பார்வையிடுவதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து 2½ கோடி மக்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அமீரகம், இந்தியா உள்ளிட்ட 192 நாடுகள் பங்கேற்கும் இந்த கண்காட்சியில் அந்த நாடுகளுக்கான தனித்தனி அரங்கங்கள் மிக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணங்கள் தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இலவச அனுமதி
அதன்படி ஒருமுறை சென்று பார்வையிட நபர் ஒருவருக்கு 95 திர்ஹாம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே 6 மாதத்திற்கான பாஸ் பெறுவதற்கு 495 திர்ஹாம் கட்டணம் செலுத்தினால் போதுமானது. இதில் கட்டண சலுகையாக 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அனுமதி இலவசமாகும். அவர்களுடன் வரும்
பாதுகாவலர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்பட்டுள்ளது.பார்வையாளர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தங்கள் அடையாள அட்டையை கையில் எடுத்து சென்றால் இலவசமாக பார்வையிடலாம். இதில் மாணவர்களுக்கு உலகின் எந்த பகுதியில் படித்து வந்தாலும் அவர்கள் படிக்கும் கல்வி மையத்தின் அடையாள அட்டையை எடுத்து வந்தால் இலவச அனுமதி வழங்கப்படும்.

18-ந் தேதி முதல் விற்பனை
ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று பார்வையிட வசதியாக மாதாந்திர பாஸ் பெறுவதற்கு 195 திர்ஹாம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் வருகிற 18-ந் தேதி முதல் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள டிராவல் ஏஜெண்டுகள், சுற்றுலா நிறுவனங்கள், ஓட்டல் குழுமங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 500 அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்கள் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி
எக்ஸ்போ 2020 வளாகத்திற்குள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ஒரு நாளில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். முதல் நாள் நிகழ்ச்சியில் மட்டும் இந்த எண்ணிக்கையில் சில மாறுபாடுகள் கொண்டு வரப்படலாம்.அமீரக சர்வதேச ஒத்துழைப்புக்கான மந்திரியும், எக்ஸ்போ 2020 தலைவருமான ரீம் அல் ஹாஷெமி ஏற்கனவே கூறியுள்ளபடி பார்வையாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை. என்றாலும் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story