விண்வெளியில் இருந்து பூமியைப் பார்த்த அனுபவம் குறித்து ஸ்ரீஷா பாண்ட்லா சிலிர்ப்பு


விண்வெளியில் இருந்து பூமியைப் பார்த்த அனுபவம் குறித்து  ஸ்ரீஷா பாண்ட்லா சிலிர்ப்பு
x
தினத்தந்தி 13 July 2021 12:45 PM GMT (Updated: 13 July 2021 12:45 PM GMT)

விண்வெளிக்கு செல்வது சிறுவயது முதலே எனது கனவு. தற்போது அந்த கனவு நனவாகி இருக்கிறது என ஸ்ரீஷா பாண்ட்லா கூறி உள்ளார்.

வாஷிங்டன்

ஆந்திர மாநிலம் குண்டூரை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீஷா பாண்ட்லா, விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் வி.எஸ்.எஸ். யூனிட்டி என்ற விண்வெளி விமானத்தில் விண்வெளிக்கு பறந்தார். அவருடன் இந்த நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட 5 பேரும் பயணித்தனர்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பாலைவனத்துக்கு மேலாக 88 கிலோமீட்டர் தூரத்தை அடைந்த அவர்களால் பூமியின் வளைவை காண முடிந்தது. 

சுமார் 50 ஆயிரம் அடி உயரத்தை அடைந்ததும் இரட்டை விமானங்களில் இருந்து யுனிட்டி 22 விண்கலம் பிரிந்தது

இதையடுத்து நெருப்புப் பறக்க சீறிப்பாய்ந்த யுனிட்டி விண்கலம் வளிமண்டலத்தைத் தாண்டிச் சென்றது. 60 நொடிகளில் யுனிட்டி 22 விண்கலம் சுமார் 2 லட்சத்து 95 ஆயிரம் அடி உயரத்தை அதாவது கிட்டத்தட்ட 90 கிலோ மீட்டர் உயரத்தை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் பிரான்சன் உள்ளிட்ட குழுவினர் 85 கிலோ மீட்டர் உயரம் வரை பயணித்தனர்.

புவியீர்ப்புப் பாதையைக் கடந்து விண்வெளியை அடைந்ததும், உடல் எடையற்ற தன்மையை அவர்கள் உணர்ந்தனர். அதன் பின்னர் 5 நிமிடங்கள் வரை பயணித்து பூமியின் அழகை ரசித்த பிரான்சன் குழுவினர் மீண்டும் பூமிக்குத் திரும்பினர். தாங்கள் புறப்பட்ட அதே நியூ மெக்சிகோ பாலைவனத்திலேயே அவர்கள் பத்திரமாக தரையிறங்கினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரான்சன், தங்கள் நிறுவனத்தின் 17 ஆண்டு கால உழைப்பிற்கு வெற்றி கிடைத்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஸ்ரீஷா சிலிர்ப்பு மேலிட  அளித்த பேட்டியில், கூறியதாவது:-

நான் இன்னும் விண்வெளியில் இருப்பதைப் போலவே  உணர்கிறேன்.மீண்டும் பூமிக்கு திரும்பியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதை வியப்பூட்டும் அனுபவம் என்பதற்கு மாற்றாக வேறு வார்த்தை இருக்கிறதா என்று தேடுகிறேன். விண்வெளியில் இருந்து பூமியைப் பார்த்தது வியப்பூட்டியதோடு, வாழ்வை மாற்றும் அனுபவமாக இருந்தது. இந்த முழு விண்வெளி பயணமும் அற்புதம்.

விண்வெளிக்கு செல்வது சிறு வயது முதலே எனது கனவு. தற்போது அந்த கனவு நனவாகி இருக்கிறது.

நான் ஒரு விண்வெளி வீராங்கனையாக விரும்பினேன். ஆனால் மரபுசார்ந்த முறையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ மூலம் என்னால் விண்வெளிக்கு செல்ல முடியவில்லை. எனவேதான் மரபுசாராத முறையில் இப்பயணத்தை மேற்கொண்டேன். வருங்காலத்தில் இன்னும் நிறையப்பேர் இந்த விண்வெளி அனுபவத்தைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.

விண்வெளி பயணம் என்பது பெரும் பணக்காரர்களுக்கான உல்லாசப் பயணமாக இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீஷா, ‘எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் மேலும் இரு விண்வெளி விமானங்களை உருவாக்குகிறோம். எதிர்காலத்தில் விண்வெளி பயணம் மேற்கொள்வதற்கான கட்டணமும் குறையும் என்று நம்புகிறோம்’ என்றார்.


Next Story