கொரோனா பாதிப்பு குறைந்தது; இந்தியா செல்வதற்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா


கொரோனா பாதிப்பு குறைந்தது; இந்தியா செல்வதற்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா
x
தினத்தந்தி 21 July 2021 4:28 AM GMT (Updated: 21 July 2021 4:28 AM GMT)

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில் இந்தியா செல்வதற்கான பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது.

வாஷிங்டன்,

இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா வைரஸ் 2-வது அலை உச்சத்தில் இருந்தது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் தங்கள் நாட்டு மக்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன.

அந்த வகையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பான பயண அறிவுரையை வழங்கியது.

அப்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் 4-ம் நிலை, அதாவது இந்தியாவுக்கு செல்லவே கூடாது என்கிற பரிந்துரை வழங்கப்பட்டது. அப்போது பாகிஸ்தானுக்கும் இதே பயண பரிந்துரை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், இந்தியா செல்வதற்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா சற்று எளிதாக்கியுள்ளது. அதாவது பயண பரிந்துரையை 4-ம் நிலையில் இருந்து 3-ம் நிலைக்கு குறைத்துள்ளது.

3-ம் நிலை என்பது இந்தியாவுக்கு செல்வதை மறுபரிசீலனை செய்யுங்கள் என்பதை குறிக்கிறது. இந்தியாவை போல பாகிஸ்தானுக்கான பயண பரிந்துரையையும் 4-ம் நிலையில் இருந்து 3-ம் நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story