ஆப்கானிஸ்தான் வான்வழி தாக்குதல்: தலீபான்கள் 35 பேர் பலி


ஆப்கானிஸ்தான் வான்வழி தாக்குதல்: தலீபான்கள் 35 பேர் பலி
x
தினத்தந்தி 26 July 2021 9:03 AM GMT (Updated: 26 July 2021 9:03 AM GMT)

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் வெளியேற்றம் ஆப்கானிஸ்தான் ராணுவத்தை பலவீனம் ஆக்கியுள்ளது. இதனால் அங்கு தலீபான்களின் கை மீண்டும் ஓங்கி வருகிறது.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இருந்து  அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறி வருகின்றன. கிட்டத்தட்ட 95 சதவீத படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விட்ட நிலையில், எஞ்சிய படை வீரர்கள் ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் வெளியேற்றம் ஆப்கானிஸ்தான் ராணுவத்தை பலவீனம் ஆக்கியுள்ளது. இதனால் அங்கு தலீபான்களின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக அரசு படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தலீபான்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே நாட்டின் சரிபாதி பகுதியை தங்களின் கட்டுக்குள் வைத்துள்ள தலீபான்கள்  முழு ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றும் நோக்கில் இந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களில் மட்டும் ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்கள் மற்றும் அண்டை நாடுகளுடனான முக்கிய எல்லைப் பகுதிகளை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர்,  சங்கின் மாவட்டத்தில் உள்ள தலீபான்கள் பதுங்கிடம் மீது வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தலீபான்கள் தரப்பில் 35 பேர் பலியானதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் தலீபான்கள் 81 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் ராணுவம் தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story