கடந்த 24 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தான் படைகளால் 570 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்


கடந்த 24 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தான் படைகளால் 570 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
x
தினத்தந்தி 8 Aug 2021 10:29 AM GMT (Updated: 8 Aug 2021 10:29 AM GMT)

கடந்த 24 மணி நேரத்தில் 570 க்கும் மேற்பட்ட தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் படைகளால் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காபூல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள். மாகாண தலைநகரங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே தலிபான்களிடம் நிம்ரோஸ் மாகாண தலைநகரம் சாரஞ்ச் வீழ்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜவ்சான் மாகாண தலைநகரம் ஷெபர்கானை தலிபான்கள் கைப்பற்றினார்கள்.

தற்போது குண்டூஸ் நகரை தலிபான்கள் கைபற்றி உள்ளனர்.  கடந்த மூன்று நாட்களில் தலிபான்கள்  கைப்பற்றிய மூன்றாவது மாகாண தலைநகரம் இதுவாகும்.

3 மாகாண தலைநகரங்கள் தலிபான்கள் கைவசம் சென்றுவிட்டதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலை அங்கு நிலவுகிறது.

தலிபான்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் போலீஸ் தலைமையகம், கவர்னர் வளாகம் மற்றும் நகரத்தில் உள்ள சிறைச்சாலையை கைப்பற்றியதாக கூறி உள்ளனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் படைகள்  தாக்குதல் நடத்தியதில் 570 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 309 பேர் காயமடைந்தனர் என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் லஷ்கர் கா  புறநகர் பகுதியில் சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பாகிஸ்தானியர்கள் உள்பட  45 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹெல்மண்டிற்கான தலிபான் பயங்கரவாதிகள்  தலைவர் மவ்லவி ஹிஜ்ரத் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

டான்ட், ஜெராய் மாவட்டங்கள் மற்றும் கந்தகார் மாகாண  புறநகரில் நடந்த மற்றொரு வான்வழித் தாக்குதலில்,  47 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 26 பேர் காயமடைந்தனர் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் படைகள், அமெரிக்க விமானப்படையின் உதவியுடன்  அமெரிக்க படைகள் முறையாக வெளியேறுவதற்கு முன்னதாக நாட்டில் தீவிரமாக ஆக்கிரமித்துள்ள தலிபான்களுக்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.

Next Story