ஐரோப்பாவில் இதுவரை இல்லாத வகையில், சிசிலி தீவில் 120 டிகிரி வெப்பம்


ஐரோப்பாவில் இதுவரை இல்லாத வகையில், சிசிலி தீவில் 120 டிகிரி வெப்பம்
x
தினத்தந்தி 12 Aug 2021 10:25 PM GMT (Updated: 12 Aug 2021 10:25 PM GMT)

ஐரோப்பாவில் உள்ள சிசிலி தீவில் இதுவரை இல்லாத வகையில், 48.8 டிகிரி செல்சியஸ் (119.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்ப நிலை, நேற்று முன்தினம் பதிவாகி உள்ளது. இது உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு (டபுள்யு.எம்.ஓ) மூலம் சரிபார்க்கப்பட வேண்டும் என்று பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் 1977-ம் ஆண்டு அதிகபட்ச மாக 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது என உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு தரவுகள் காட்டுகின்றன. இத்தாலியின் இந்த வெப்ப அலை, லூசிபர் என்ற அழைக்கப்படுகிற ஆன்டிசைக்ளோன் ஆப்பிரிக்காவில் இருந்து நகர்ந்து செல்வதால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இத்தாலியில் வெப்ப அலை வறுத்தெடுப்பதால், சிவப்பு எச்சரிக்கையை அந்த நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. பல பிராந்தியங்களிலும், நகரங்களிலும் இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்ப அலை காரணமாக பல இடங்களில் காட்டுத்தீ பரவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. சிசிலி, கேலபிரையாவில் 12 மணி நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்துக்களில் 3 பேர் பலியாகியும் உள்ளனர்.

தொடர் வெப்ப அலைகளால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Next Story