குழந்தைகளையாவது காப்பாற்றுங்கள்..! கெஞ்சும் தாய்மார்கள்... மனதை உருக்கும் வீடியோ


குழந்தைகளையாவது காப்பாற்றுங்கள்..! கெஞ்சும் தாய்மார்கள்... மனதை உருக்கும் வீடியோ
x
தினத்தந்தி 20 Aug 2021 5:37 AM GMT (Updated: 20 Aug 2021 5:37 AM GMT)

ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கும் தலீபான்களால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.

காபூல்

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப்படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலீபான்கள் அந்த நாட்டு அரசை கைப்பற்றி உள்ளன.

புதிய அதிபர் மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலீபான் தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.

புதிய அரசின் கட்டமைப்பு குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், அது ஷரியத் சட்டப்படி நடத்தப்படும் எனவும் தலீபான்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் 1919-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதன் நினைவாக 102-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக (இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்) தலீபான்கள் பிரகடனம் செய்தனர். இதை தலீபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முகைது தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கும் தலீபான்களால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, தலீபான்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே மோதல்கள் தொடங்கி விட்டன. குறிப்பாக ஜலாலாபாத் நகரில் தலீபான்களின் கொடியை இறக்கி விட்டு ஆப்கானிஸ்தான் தேசியக்கொடியை போராட்டக்காரர்கள் ஏற்றினர். அங்கு நடந்த வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதைப்போல கோஸ்ட் மாகாணத்தில் வன்முறை சம்பவங்கள் மூண்டதை தொடர்ந்து மாகாணம் முழுவதும் 24 மணி நேர ஊரடங்கை தலீபான்கள் அமல்படுத்தி உள்ளனர்.

காபூல் விமான நிலையத்தில் வெளியேறுவதற்கு சுமார் 6 ஆயிரம் பேர் காத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவவ வீரர்கள் பாதுகாப்பில் உள்ள இவர்கள் விரைவில் விமானங்கள்  மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்றும் ஜோ பைடன் அரசு உறுதியளித்துள்ளது.

இந்நிலையில், அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாதவர்கள், தங்கள் குழந்தைகளாவது உயிர் பிழைக்கட்டும் என அமெரிக்க ராணுவத்தினரிடமும், தப்பிச் செல்லும் நபர்களிடமும் தங்கள் குழந்தைகளை கொடுத்து அனுப்புகின்றனர். ஆனால் அவ்வாறு அழைத்துச் செல்ல தங்களுக்கு உரிமையில்லை என வீரர்கள் கண்கலங்கியவாறு தாய்மார்களிடமே குழந்தைகளை ஒப்படைத்துள்ளனர்.இதுதொடர்பான கண்ணீர் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story