நியூசிலாந்தை அச்சுறுத்தும் டெல்டா வகை கொரோனா வைரஸ்


நியூசிலாந்தை அச்சுறுத்தும் டெல்டா வகை கொரோனா வைரஸ்
x
தினத்தந்தி 24 Aug 2021 5:52 PM GMT (Updated: 24 Aug 2021 5:52 PM GMT)

நியூசிலாந்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

வெலிங்டன்,

சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவத் தொடங்கிய சமயத்தில் வலுவான சுகாதார கட்டமைப்புகளை கொண்ட நாடுகளே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய நிலையில் வெறும் 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியது. ஆனால் தற்போது ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வரும் டெல்டா கொரோனா நியூசிலாந்தையும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

கடந்த 6 மாதங்களாக அங்கு புதிய கொரோனா பாதிப்பு எதுவும் உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் அண்மையில் ஆக்லாந்து நகரை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆக்லாந்து நகரில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தலைநகர் வெலிங்டனிலும் டெல்டா வைரஸ் கால்பதித்துள்ளது. இதனால் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

அந்தவகையில் ஒரே நாளில் 41 பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 38 பேர் ஆக்லாந்து நகரைச் சேர்ந்தவர்கள். 3 பேர் வெலிங்டனை சேர்ந்தவர்கள். வைரஸ் பரவல் இதே வேகத்தில் தொடர்ந்தால் நியூசிலாந்தில் நிலைமை மோசமாகும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Next Story