7 மாதங்களில் முதல்முறையாக சீன அதிபருடன் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு


7 மாதங்களில் முதல்முறையாக சீன அதிபருடன் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு
x
தினத்தந்தி 10 Sep 2021 8:20 PM GMT (Updated: 2021-09-11T01:50:12+05:30)

7 மாதங்களில் முதல்முறையாக சீன அதிபர் ஜின்பிங்குடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ படைன் தொலைபேசி வழியாக பேச்சு நடத்தினார். அவர்கள் பேசியது என்ன என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாஷிங்டன்,

உலகின் இருபெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே முன் எப்போதும் இல்லாத வகையில் இரு தரப்பு உறவு மோசமாக இருந்து வருகிறது.

குறிப்பாக வர்த்தகமும், கொரோனா பரவல் விவகாரமும் இரு தரப்பு உறவு மோசமானதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் ஒருவருக்கொருவர் தொலைபேசி வழியாகக் கூட கடந்த 7 மாதங்களாக பேசாமல் இருந்து வந்தனர்.

முதல் முறையாக பேச்சு

இந்தநிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின் பிங்கை முதல்முறையாக தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அவர் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் ஜின்பிங்குடன் நடத்திய 2-வது தொலைபேசி பேச்சுவார்த்தை இதுவாகும்.

இந்த பேச்சுவார்த்தை 90 நிமிடங்கள் நீடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த தொலைபேசி வழி பேச்சுவார்த்தையின்போது, எதிர்காலத்தில் நாம் எந்தவொரு சூழ்நிலையிலும், மோதலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று ஜின்பிங்கிடம் ஜோ பைடன் தெளிவுபடுத்தினார்.

ஜின்பிங் சுட்டிக்காட்டினார்

இரு தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து சீன அரசின் சிசிடிவி கூறுகையில், “இந்த பேச்சுவார்த்தை நேர்மையானது, ஆழமானது. சீனாவுடனான அமெரிக்காவின் சமீபத்திய கொள்கையால் வர்த்தகம், தொழில்நுட்பம், மனித உரிமைகள், கொரோனா வைரஸ் தோற்றம் போன்ற விவகாரங்களில் ஏற்பட்ட கடுமையான சிரமங்களை ஜோ பைடனிடம் ஜின்பிங் சுட்டிக்காட்டினார்” என தெரிவித்தது.

சீனாவும், அமெரிக்காவும் தங்கள் உறவுகளைச் சரியாகக் கையாள முடியுமா என்பது உலகின் எதிர்காலம் மற்றும் தலையெழுத்துக்கு முக்கியமானது எனவும் அது குறிப்பிட்டது.

வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறுகையில், “ஜோ பைடனும், ஜின்பிங்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், பருவநிலை மாற்றம் உள்பட உலக விவகாரங்கள் பற்றியும், வடகொரியாவின் அணு ஆயுத விவகாரங்கள் குறித்தும் விவாதித்தனர்” என கூறப்பட்டுள்ளது.

இரு தரப்பிலும் தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலைநிறுத்த முடியாதது, ஆபத்தானது, இதில் தலைவர்களின் தலையீடு தேவைப்படுகிறது என்பதை அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

மோதலை விரும்பவில்லை

இதையொட்டி வாஷிங்டன் வெள்ளை மாளிகை உயர் அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் பேசுகையில், “நாங்கள் (சீனாவுடன்) கடுமையான போட்டியை வரவேற்கிறோம். அதே நேரத்தில் அந்தப் போட்டியானது மோதலாக மாறுவதை விரும்பவில்லை” என குறிப்பிட்டார்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜின் பிங்கும் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, பரந்த, மூலோபாய விவகாரங்களில்தான் கவனம் செலுத்தினர் என்றும், நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்து உறுதியான முடிவுகள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்றும், ஜோ பைடன்-ஜின்பிங் சந்திப்புக்கான உச்சிமாநாட்டை அமைப்பது குறித்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Next Story