இரட்டை கோபுர தாக்குதல் 20-ம் ஆண்டு நினைவு தினம்


இரட்டை கோபுர தாக்குதல் 20-ம் ஆண்டு நினைவு தினம்
x
தினத்தந்தி 11 Sep 2021 7:11 PM GMT (Updated: 2021-09-12T00:41:17+05:30)

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலின் 20-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

உலகை அதிர வைத்த இரட்டை கோபுர தாக்குதல்
2001 செப்டம்பர் 11. அமெரிக்கர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலக மக்களாலும் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அல்-கொய்தாவை சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் அமெரிக்காவின் 4 பயணிகள் விமானங்களை கடத்தி அதிபயங்கர தாக்குதலை அரங்கேற்றிய தினம் அது.அல்-கொய்தா பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட முதல் விமானம் நியூயார்க்கின் அடையாள கோபுரமாக வானுயர நின்று கொண்டிருந்த உலக வர்த்தக மையத்தின் வடக்கு கட்டிடத்தை உள்ளூர் நேரப்படி 8.46 மணியளவில் தாக்கியது.ஆங்கில திரைப்படங்களை விஞ்சும் அளவுக்கு ‌நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டு பாதுகாப்பு அதிகாரிகளே உறைந்து போயிருந்த நிலையில், சரியாக 9.03 மணிக்கு 2-வது விமானம் இரட்டை கோபுரத்தின் தெற்கு கட்டிடத்தின் மீது மோதியது.

110 மாடி கட்டிடம் முழுவதுமாக சரிந்து விழுந்தது
அடுத்தடுத்து விமானங்கள் மோதியதில் இரட்டை கோபுர கட்டிடத்தில் தீ பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.‌ நகரம் முழுவதும் கரும் புகை மண்டலம் சூழ்ந்தது. இரண்டே மணி நேரத்தில் 110 மாடி கட்டிடம் முழுவதுமாக சரிந்து விழுந்தது. நியூயார்க் நகரம் முழுவதும் மரண ஓலம் ஒலித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 3-வது விமானம் தலைநகர் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை 9.37 மணியளவில் தாக்கியது.இதற்கிடையில் 4-வது விமானம் பென்சில்வேனியாவில் உள்ள வயல்வெளி ஒன்றில் விழுந்து நொறுங்கியது. ஆனால் இந்த விமானம் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது மோத திட்டமிடப்பட்டிருந்ததாகவும் பயணிகள் சண்டையிட்டதால் அது வயல்வெளியில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

3 ஆயிரம் பேர் கொன்று குவிப்பு
அமெரிக்காவை நிலைகுலைய வைக்கும் அளவுக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 77 பேரும் அடங்குவர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.இந்த தாக்குதல் நடந்து ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் உத்தரவின் பேரில் அல்-கொய்தாவை ஒழித்து, அதன் தலைவர் ஒசாமா பின்லேடனை பிடிக்க ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது அமெரிக்கா.ஆனால் தாக்குதல் நடந்து 10 ஆண்டுகளுக்கு பின்னர்தான் அமெரிக்க படைகளால் பின்லேடனை நெருங்க முடிந்தது. 2011-ம் ஆண்டு மே 2-ந்தேதி பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் பதுங்கியிருந்த பின் லேடனை சுட்டுக்கொன்று பழி தீர்த்தது அமெரிக்கா.

தலீபான்கள் வசம் சென்ற ஆப்கானிஸ்தான்
அதன் பின்னரும் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளை முழுமையாக ஒழிப்பதற்காக அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தனது படைகளை நிறுத்தி வைத்திருந்தது. இந்த சூழலில்தான் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அமெரிக்கப் படைகள் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதிக்குள் முழுமையாக திரும்ப பெறப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் இறுதியில் அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்ட நிலையில் அந்த நாடு தற்போது தலீபான்களின் வசம் சென்றுள்ளது.

20-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
இதனால் ஆப்கானிஸ்தானில் மீண்டும் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் வேரூன்றலாம் என்கிற அச்சம் உள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் நிச்சயம் அது அமெரிக்காவுக்கு பேராபத்தாகவே இருக்கும்.இந்த நிலையில் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நிகழ்ந்து நேற்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதையொட்டி நாடு முழுவதும் 20-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.தாக்குதல்கள் நடந்த நியூயார்க், வாஷிங்டன் மற்றும் 4-வது விமானம் விழுந்து நொறுங்கிய பென்சில்வேனியா ஆகிய இடங்களில் மக்கள் திரண்டு மலர் கொத்துகளை வைத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

உலக தலைவர்கள் அனுதாபம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோரும் தாக்குதல் நடந்த இடங்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உள்ளிட்டோரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர்.குறிப்பாக இரட்டை கோபுர தாக்குதல் நினைவு நாளில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக நியூயார்க் நகரில் அமெரிக்காவின் 3 ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் மனைவிகள் அருகருகே நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ படைன் அவரது மனைவி ஜில் பைடன், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அவரது மனைவி மிச்செல் மற்றொரு முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் அவரது மனைவி கிளாரி கிளிண்டன் ஆகியோர் வரிசையாக நின்று, தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியீடு
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் போன்ற உலக தலைவர்களும் இரட்டை கோபுர தாக்குதல் நினைவுகூர்ந்து தங்களின் அனுதாபத்தை வெளிப்படுத்தினர்.முன்னதாக இரட்டைக் கோபுரத் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ‘‘என்னைப் பொறுத்தவரை, செப்டம்பர் 11 முக்கிய பாடம். ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலம் என உணரவைத்த தருணம்'' என கூறினார்.

இதனிடையே தாக்குதல் நடந்தபோது எடுக்கப்பட்ட செயற்கைகோள் படங்களை மாக்ஸர் டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Next Story