ஐவரி கோஸ்ட்: ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5 பேர் பலி


ஐவரி கோஸ்ட்: ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5 பேர் பலி
x
தினத்தந்தி 11 Sep 2021 10:33 PM GMT (Updated: 2021-09-12T04:03:56+05:30)

ஐவரி கோஸ்ட் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

யமுசூக்ரோ,  

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஐவரி கோஸ்ட்டின் மேற்கு பகுதியில் புர்கினா பாசோ நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள லோகோடோகோ நகரில் இருந்து அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.

அந்த ஹெலிகாப்டரில் விமானி உள்பட 5 பேர் இருந்தனர்.‌ புறப்பட்டுச்சென்ற சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அதோடு ரேடார் பார்வையில் இருந்தும் அந்த ஹெலிகாப்டர் மறைந்தது.

இதைத்தொடர்ந்து அந்த ஹெலிகாப்டர் மாயமானதாக அறிவிக்கப்பட்டு அதை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இதில் அந்த ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகிலேயே விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்தது.‌

ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் அந்த நாட்டு ராணுவம் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

Next Story