பாகிஸ்தானில் மின்னல் தாக்கி 14 பேர் சாவு


பாகிஸ்தானில் மின்னல் தாக்கி 14 பேர் சாவு
x
தினத்தந்தி 12 Sep 2021 4:55 PM GMT (Updated: 12 Sep 2021 4:55 PM GMT)

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தோர்ஹர். இந்த கிராமத்தில் முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கன மழை பெய்ய தொடங்கியது.‌

இந்த மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. இதில் தோர்ஹர் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கன மழையை தொடர்ந்து அங்கு பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.‌

இதனிடையே மழை பெய்தபோது அங்குள்ள 3 வீடுகளை மின்னல் தாக்கியது. இதில் அந்த வீடுகளில் இருந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 14 பேர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, மழை வெள்ளம் பாதித்த அந்த கிராமத்தில் மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டு முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

Next Story