அமெரிக்காவில் முதல்முறையாக விண்வெளி சுற்றுலா முடித்து 4 பேர் பூமிக்கு திரும்பினர்


அமெரிக்காவில் முதல்முறையாக விண்வெளி சுற்றுலா முடித்து 4 பேர் பூமிக்கு திரும்பினர்
x
தினத்தந்தி 19 Sep 2021 9:25 PM GMT (Updated: 19 Sep 2021 9:25 PM GMT)

அமெரிக்காவில் முதல் முறையாக விண்வெளி சுற்றுலா முடித்து 4 பேர் பூமிக்கு வெற்றிகரமாக திரும்பினர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்தை பெரும் கோடீசுவரரான எலன் மஸ்க் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தின் சார்பில் விண்வெளி வீரர்கள் அல்லாத சாமானிய மனிதர்களை முதன்முதலாக விண்வெளிக்கு சுற்றுலாபோன்று அழைத்துச்சென்று வர இன்ஸ்பிரேஷன்4 என்ற திட்டம் தீட்டினர்.

இதன்கீழ் கடந்த 15-ந் தேதியன்று புளோரிடாவில் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் 4 பேர் விண்வெளிக்கு புறப்பட்டனர். அவர்கள், தொழில் அதிபர் ஜேரட் ஐசக்மேன், ஆராய்ச்சியாளர் சியான் பிராக்டர், மருத்துவ நிபுணர் ஹேலி ஆர்சீனாக்ஸ் மற்றும் அமெரிக்க விமானப்படை வீரர் கிறிஸ்டோபர் செம்ப்ரோஸ்கி ஆகியோர் ஆவார்கள்.

இந்தக் குழுவின் தலைவராக ஜேரட் ஐசக்மேன் செயல்பட்டார்.

இந்த விண்வெளிப்பயணத்துக்காக 4 பேருக்கும் சேர்த்து, இவர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபரான எலன் மஸ்குக்கு சுமார் 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,500 கோடி) பணத்தை கட்டணமாக அளித்ததாக டைம் பத்திரிகை கணித்துள்ளது.

இவர்களது விண்கலம் 360 மைல் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. இது சர்வதேச விண்வெளி நிலையத்தை விட உயரமானது.

இவர்கள் 3 நாட்கள் விண்வெளியில் இருந்தவாறு அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இந்த பயணத்தை வெற்றிகரமாக 4 பேரும் முடித்துக்கொண்டு, சனிக்கிழமை இரவு பூமிக்கு திரும்பினர்.

இவர்களை வரவேற்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், இன்ஸ்பிரேஷன் 4 திட்ட குழுவினரே, பூமிக்கு மீண்டும் வருக என கூறி இருந்தது. புளோரிடாவில் அட்லாண்டிக் கடலோரப்பகுதியில் அவர்களது விண்கலம் தண்ணீரில் இறங்கியதை காட்டும் படத்தையும் வெளியிட்டு இருந்தது.

பூமிக்கு திரும்பியதைத் தொடர்ந்து ஜேரட் ஐசக்மேன் கூறுகையில், இது எங்களுக்கான அருமையான சவாரியாக அமைந்தது என குறிப்பிட்டார்.

இந்த விண்வெளி சுற்றுலா சென்றிருந்த 4 பேரும் 6 மாதங்கள் பயிற்சி பெற்றனர். விண்வெளி பயணத்தின்போது அவர்களது ரத்த ஆக்சிஜன் அளவு, தூக்கம், முக்கிய உடல் உறுப்புகளின் திறன் உள்ளிட்டவை மதிப்பிடப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

விண்வெளி வீரர்கள் அல்லாதவர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து சென்று, பத்திரமாக பூமிக்கு திரும்ப வைத்து அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய வரலாறு படைத்துள்ளது.

Next Story