உலக நாடுகளில் புதிதாக பரவும் AY 4.2 வகை கொரோனா..!


உலக நாடுகளில் புதிதாக பரவும் AY 4.2 வகை கொரோனா..!
x
தினத்தந்தி 26 Oct 2021 4:26 PM GMT (Updated: 26 Oct 2021 4:26 PM GMT)

உலக நாடுகளில் புதிதாக AY 4.2 வகை உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன்,

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்றானது, உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ள மருத்துவ உலகம் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் இதன் தீவிரத்தை கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

பொதுவாகவே வைரஸ் கிருமிகள் தங்கள் புறச்சூழலை பொறுத்து உருமாற்றம் அடையும் தன்மையை கொண்டவை ஆகும். அதில் சிலவகை உருமாற்றங்கள் அந்த கிருமியை பலமிழக்கச் செய்துவிடும். ஆனால் சில சமயங்களில் இந்த உருமாற்றமானது அந்த கிருமியின் வீரியத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துவிடும்.

அந்த வகையில் கொரோனா வைரஸ் கிருமியானது, அது கண்டறியப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு நாடுகளில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. 

இதில் ஆல்பா வகை கொரோனா, முதல் முறையாக இங்கிலாந்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் இந்த வகை கொரோனா அதிகம் பரவியது. இதுவரை உலகம் முழுவதும் 172 நாடுகளில் ஆல்பா வகை கொரோனா பரவி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே போல் பீட்டா வகை கொரோனா, முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டது. இது தென் ஆப்பிரிக்க நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த பீட்டா வகை கொரோனா தொற்று இதுவரை உலகம் முழுவதும் 120 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து காமா வகை கொரோனா, முதல் முறையாக பிரேசில் நாட்டில் உள்ள மானாஸ் நகரில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இந்த வகை கொரோனாவால் பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததோடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட காரணமாகவும் அமைந்தது. இந்த காமா வகை கொரோனா தொற்று இதுவரை உலகம் முழுவதும் 72 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு அடுத்ததாக இந்தியாவில் மிக வேகமாக பரவி அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா கண்டறியப்பட்டது. இந்த டெல்டா வகை கொரோனா இதுவரை உலகம் முழுவதும் 96 நாடுகளில் பரவியுள்ளது. இது ஆல்பா வகை கொரோனாவை விட 55 சதவீதம் ஆதிக பரவும் தன்மையை கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த டெல்டா வகையை தொடர்ந்து தற்போது டெல்டா பிளஸ் வகை கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் டெல்டா வகை கொரோனாவின் துணைப் பரம்பரையைச் சேர்ந்ததாக கண்டறியப்பட்டுள்ள AY 4.2 என்ற கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளில் பரவியது கண்டறியப்பட்டது. இந்த வகை கொரோன பாதிப்பு இந்தியாவிலும் சிலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த AY 4.2 கொரோனா வகையானது, வேகமாக பரவும் தன்மை உடையது என்று ஐ.சி.எம்.ஆர். விஞ்ஞானி டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார். எனினும் இந்த வகை கொரோனாவால் உயிரிழப்பு  குறைவாகவே ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்த AY 4.2 கொரோனாவானது, டெல்டா வகை கொரோனாவை விட வேகமாக பரவக்கூடியது தான் என்றாலும், இது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்பதற்கும், தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாதது என்பதற்கும் எந்த வித ஆதாரங்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே டெல்டா வகை கொரோனா தொற்று இந்தியாவில் ஒரு சில இடங்களில் தான் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ள AY 4.2 வகை கொரோனா தொற்று, அதிக இடங்களில் பரவுவதற்கு முன்பாக ஆரம்பத்திலேயே அதனை கட்டுப்படுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Next Story