ஆப்கானிஸ்தான்; அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட பின் மாயமான குழந்தை கண்டுபிடிப்பு


ஆப்கானிஸ்தான்; அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட பின் மாயமான குழந்தை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2022 6:45 AM GMT (Updated: 9 Jan 2022 6:45 AM GMT)

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை பிடித்ததும் அந்நாட்டில் இருந்து ஏராளமானவர்கள் அவசர அவசரமாக வெளியேறினார்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறினர். ஆகஸ்ட் 19 ந்தேதி காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த அமெரிக்க விமானத்தில் ஏற நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் முயற்சித்தனர்.

அப்போது ஆப்கானை சேர்ந்த ஒரு தம்பதியான  மிர்சா அலி அகமதியும் அவரது மனைவி சுரயாவும்  ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தின் வாயில்களுக்கு வெளியே   நாட்டை விட்டு வெளியேற போராடிக்கொண்டு இருந்தனர்.  நுழைவாயிலுக்கு விரைவில் செல்வோம் என்று நினைத்து. அவர்கள் தங்கள் குழந்தையை அமெரிக்க பாதுகாப்பு படை வீரரிடம் ஓப்படைத்தனர்.

பின்னர் விமான நிலையத்துக்குள் சென்று மகனை தேடியபோது அவனை காணவில்லை. அந்த சிப்பாயும் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்கவில்லை. இது பற்றி மிர்சா அலி அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். அப்போது அவர்கள் குழந்தையை வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பி இருக்கலாம். மீண்டும் குழந்தையை உங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்று கூறினார்.

இதையடுத்து மிர்சா அலி குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார். அமெரிக்காவின் டெக்சாஸ் ராணுவ தளத்துக்கு விமானம் சென்றதும் மிர்சா அலி மகனை தேடிப்பார்த்தார். ஆனால் அந்த விமானத்தில் குழந்தை வரவில்லை. இதையடுத்து பல மாதங்களாக தேடிப்பார்த்தும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே மிர்சா அலி காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியபோது விமான நிலையத்துக்கு சவாரி சென்ற கால்டாக்சி டிரைவர் ஹரீத் சபி என்பவர் குழந்தை சோகைல் அகமது அழுது கொண்டிருப்பதை பார்த்தார். அவர் குழந்தையை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் சோகைல் அகமதுவின் பெற்றோரை தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து சபி தனக்கு ஆண் குழந்தை இல்லாததால் சோகைல் அகமதுவை தானே வளர்க்க முடிவு செய்தார். அவருக்கு முகமது அபேட் என்று பெயரிட்டனர். சபிக்கு ஏற்கனவே 3 மகள்கள் உள்ளனர். அனைத்து குழந்தைகளும் ஒன்றாக இருக்கும் படங்கள் சபி தனது பேஸ்புக்கில் பதிவிட்டார்.

இதை அறிந்த சிலர் அந்த புகைப்படங்களை பகிர்ந்தனர். வடகிழக்கு மாகாணமான படாக்சானில் வசித்த சோகைல் அகமதுவின் தாத்தா இதையறிந்து உறவினர்களுடன் சேர்ந்து சபி வசிக்கும் முகவரியை கண்டுபிடித்தார். பின்னர்   தனது பேரன் சோகைல் அகமதுவை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறி அவருக்கு பணம், பரிசு பொருட்களை கொடுத்தார். ஆனால் சோகைலை திருப்பி கொடுக்க சபி மறுத்தார்.

இதையடுத்து முகமது ரசாவி செஞ்சிலுவை சங்கத்தின் உதவியை நாடினார். அவர்கள் சபியிடம் பேசி குழந்தையை தாத்தாவிடம் ஒப்படைக்குமாறு கூறினார்கள். குழந்தையை 5 மாதங்கள் கவனித்துக் கொண்டதற்காக ஒரு தொகையையும் சபியிடம், முகமது ரசாலி வழங்கினார். இதையடுத்து போலீசார் முன்னிலையில் குழந்தை சோகைலை காபூல் அழைத்து வரப்பட்டு தாத்தா முகமது விடம் ஒப்படைக்கப்பட்டான். தற்போது குழந்தை சோகைவின் தந்தை அமெரிக்காவில் மிக்சிகன் மாகாணத்தில் வசித்து வருகிறார். அவரிடம் குழந்தையை ஒப்படைக்கும் பணியில் முகமது ரசாவி ஈடுபட்டுள்ளார்.


Next Story