பொதுமக்களை சுட்டுத்தள்ள ராணுவம் தயாராக உள்ளதா? இலங்கை ராணுவ தளபதி விளக்கம்


Photo Credit: AFP
x
Photo Credit: AFP
தினத்தந்தி 11 May 2022 4:04 AM GMT (Updated: 2022-05-11T09:34:30+05:30)

இலங்கையில் உச்ச கட்ட பதற்றம் நிலவும் நிலையில், காவல்துறை மற்றும் இராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு,

கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கையில், ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக மக்கள்  போராட்டம் வெடித்தது. கடந்த சில வாரங்களாக கொழும்புவில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு வன்முறை வெடித்தது. 

இதையடுத்து மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த  சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.பேருந்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடைபெற்றன. போராட்டக்காரர்கள் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது. மேலும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தஞ்சம் அடைந்துள்ள கடற்படை தளத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பொது சொத்துக்கள் மற்றும் தனி நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இலங்கை முப்படைகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவ ஊடக பிரிவு தகவல்கள் தெரிவித்தன.  இந்நிலையில் போராட்டக்காரர்கள் எந்த சூழலிலும், துப்பாக்கிச்சூடு நடத்தப்படாது என்று இலங்கை ராணுவ தளபதி விளக்கம் அளித்துள்ளார். பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலிலும் பாதுகாப்புப் படை ஒரு போதும் ஈடுபடாது என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


Next Story