இலங்கை: காலி முகத் திடலை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேற உத்தரவு...!


இலங்கை: காலி முகத் திடலை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேற உத்தரவு...!
x
தினத்தந்தி 11 May 2022 11:30 AM GMT (Updated: 2022-05-11T17:00:07+05:30)

இலங்கை காலி முகத் திடலில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவர்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டு உள்ளது.

கொழும்பு,

கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கையில், அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதுவும் எந்தவொரு பலனையும் அளிக்கவில்லை. 

இந்தநிலையில், அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டியதில், இலங்கை பற்றி எரிந்தது. அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டுக்கொளுத்தினர்.

இந்த வன்முறைகளில் ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். 

நாட்டில் கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. நாடு முழுவதும்  ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. 

தொடா்ந்து அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இலங்கை ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டு உள்ளது.

மேலும் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு எழுத்துப்பூர்வமான உத்தரவை பெற வேண்டும் என்றும் காவல்துறை அறிவித்து உள்ளது.

Next Story