ரூபாய் நோட்டுகளை விட ஏ.டி.எம். கிரெடிட் கார்டுகளில் அதிக நேரம் உயிர் வாழும் கொரோனா வைரஸ்


ரூபாய் நோட்டுகளை விட  ஏ.டி.எம். கிரெடிட் கார்டுகளில் அதிக நேரம் உயிர் வாழும் கொரோனா வைரஸ்
x
தினத்தந்தி 14 May 2022 6:54 AM GMT (Updated: 2022-05-14T12:24:57+05:30)

ரூபாய் நோட்டுகளுடன் ஒப்பிடும் போது ஏ.டி.எம். கிரெடிட் கார்டுகளில் கொரோனா வைரஸ் அதிக நேரம் உயிர் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

லண்டன்:

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. கொரோனா வைரஸ் பல்வேறு பொருட்களில் பல மணிநேரம் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது.

காகிதம், பிளாஸ்டிக், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் படர்ந்து இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பாக மக்களிடம் அதிகமாக புழங்கும் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனால் ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைத்து ஏ.டி.எம். மற்றும் கிரெட் கார்டுகளை பயன்படுத்தலாம் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ரூபாய் நோட்டுகளுடன் ஒப்பிடும் போது ஏ.டி.எம். கிரெடிட் கார்டுகளில் கொரோனா வைரஸ் அதிக நேரம் உயிர் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களில் வைரசை பரவவிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 30 நிமிடம், 4மணி நேரம், 24 மணி நேரம் மற்றும் 48 மணி நேரம் ஆகிய நான்கு வகையான நேரங்களில் சோதனை செய்யப்பட்டது. இதில் 30 நிமிடங்களுக்கு பிறகு ரூபாய் நோட்டுகளில் வைரஸ்களை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. வைரஸ் 99.9993 சதவீத அளவுக்கு குறைந்தது. 24 மற்றும் 48 மணி நேரத்துக்கு பிறகு ரூபாய் நோட்டுகளில் முற்றிலுமாக வைரஸ் இல்லை.

ஏ.டி.எம். மற்றும் கிரெடிட்கார்டுகளில் கொரோனா வைரசை பரவவிட்ட 30 நிமிடங்களுக்கு பிறகு 90 சதவீதம் தான் குறைந்து இருந்தது. 48 மணி நேரத்துக்கு பிறகும் கார்டுகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

4 மணி நேரத்துக்கு பிறகு 99.6 சதவீதமாகவும், 24 மணி நேரத்துக்கு பிறகு 99.96 சதவீதமாக குறைந்தாலும் 48 மணி நேரம் பிளாஸ்டிக் கார்டுகளில் அவை உயிர் வாழுகின்றன.

அதே போல் கார்டுகளை போலவே நாணயங்களிலும் கொரோனா வைரஸ் 24 மற்றும் 48 மணி நேரத்திற்குப்பிறகு சிறிய அளவில் உயிர் வாழ்ந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


Next Story