இலங்கையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்


இலங்கையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
x

இலங்கையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதில் மேற்கு மாகாணத்தில் அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது.

கொழும்பு,

இலங்கையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதில் மேற்கு மாகாணத்தில் அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. அத்துடன் கண்டி, காலே, யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த ஆண்டை விட 300 மடங்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் குறைவானோரே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 60 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

அதிக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள பகுதிகளில் 36 சுகாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், எனினும் பெரும்பாலான அரசு ஆஸ்பத்திரிகளில் நோய் கண்டறிவதற்கான கருவிகள் கூட இல்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.

இலங்கை சுகாதாரத்துறைக்கு மேற்படி கருவிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு ஏராளமான தொகை பாக்கி வைத்திருப்பதால், அந்த நிறுவனங்கள் தற்போது கருவிகளை வழங்குவது இல்லை என தெரிய வந்துள்ளது. எனினும் நாடு முழுவதும் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story