மியான்மரில் சோகம்: வான்வழி தாக்குதலில் 60 பேர் பலி


மியான்மரில் சோகம்: வான்வழி தாக்குதலில் 60 பேர் பலி
x
தினத்தந்தி 24 Oct 2022 11:06 PM GMT (Updated: 24 Oct 2022 11:07 PM GMT)

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்து பிறகு நடைபெற்ற பெரிய மற்றும் முதல் வான் தாக்குதலாக இது கருதப்படுகிறது.

பாங்காக்,

மியான்மர் நாட்டில் கச்சின் மாநிலம் உள்ளது. இந்த மாநிலத்தின் அங் சங் சூ தலைமையிலான அரசு நிர்வாகம் செயல்பாட்டில் இருந்தது. ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது முழுகட்டுப்பாடும் ராணுவத்தின் கீழ் சென்றது.

இந்த நிலையில் மியான்மரின் கச்சின் மாநிலத்தில் கச்சின் இன சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பின் ஆண்டு விழாநடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசைக்கலைஞர்கள், அமைப்பினர், பொதுமக்கள் என 400 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென மியான்மர் ராணுவம் சார்பில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த திடீர் தாக்குதலில் இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் பாடகர்கள், இசைக்கலைஞர்கள்,பொது மக்களும் அடங்குவர். ராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்து பிறகு நடைபெற்ற பெரிய மற்றும் முதல் வான் தாக்குதலாக இது கருதப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து மியான்மர் ராணுவம் மற்றும் அரசு ஊடகங்கள் மவுனம் சாதித்து வருகின்றனர். மியான்மரின் அட்டூழியங்கள் குறித்து விரிவான ஆலோசனை கூட்டம் தென்கிழக்கு ஆசிய வெளிநாட்டு மந்திரிகள் சார்பில் நடைபெற இருந்தது. கூட்டம் நடக்க இருந்த நிலையில் இந்த கோர தாக்குதல் அரங்கேறி உள்ளது.


Next Story