நேபாள நாடாளுமன்றம் முன் பிரதமர் வெளியேறியபோது தீக்குளித்த நபரால் பரபரப்பு


நேபாள நாடாளுமன்றம் முன் பிரதமர் வெளியேறியபோது தீக்குளித்த நபரால் பரபரப்பு
x

நேபாள நாடாளுமன்றத்தில் இருந்து பிரதமர் வெளியேறி காரில் செல்லும்போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.



காத்மாண்டு,


நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தாவின் தலைமையிலான சி.பி.என். மாவோயிஸ்டு கட்சி ஆட்சி செய்து வருகிறது. முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் கட்சி மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, பிரசந்தா தலைமையில் ஆட்சி அமைந்தது.

இதன்படி, நேபாளத்தின் பிரதமராக 3-வது முறையாக பிரசந்தா பதவியேற்றார். அவருக்கு அதிபர் பித்யாதேவி பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நேபாள நாடாளுமன்றத்திற்கான புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதில், சி.பி.என்-யூ.எம்.எல். கட்சியின் வேட்பாளரான தேவ் ராஜ் கிமிரே, 167 ஆதரவு வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

இந்த சூழலில், நேபாள நாட்டு நாடாளுமன்றத்தில் இருந்து இன்று மதியம் பிரதமர் பிரசந்தா வெளியேறி காரில் ஏறி சென்றார். அவர் செல்லும்போது நடுத்தர வயதுடைய நபர் ஒருவர் டீசலை எடுத்து, திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நபர் இல்லம் மாவட்ட பகுதியை சேர்ந்த பிரேம் பிரசாத் ஆச்சாரியா (வயது 37) என தெரிய வந்தது. அவரை கீர்த்திப்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளன.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த காட்சிகளை நபர் ஒருவர் வீடியோவாக படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு உள்ளார்.


Next Story