ஐ.பி.எல். கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணி 128 ரன்கள் சேர்ப்பு


ஐ.பி.எல். கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணி 128 ரன்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 17 May 2017 10:30 PM GMT (Updated: 18 May 2017 11:57 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஐதராபாத் சன் ரைசர்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு,

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில், லீக் ஆட்டம் முடிவில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஐதராபாத் சன் ரைசர்ஸ், 4-வது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

கொல்கத்தா அணியில் மனிஷ் பாண்டே காயம் காரணமாக இடம் பெறவில்லை. குல்தீப் யாதவ் நீக்கப்பட்டார். சூர்யகுமார் யாதவ், நாதன் கவுல்டர் நிலே, பியுஷ் சாவ்லா, இஷாங் ஜக்கி அணியில் சேர்க்கப்பட்டனர். ஐதராபாத் அணியில் ஹென்ரிக்ஸ், முகமது நபி, முகமது சிராஜ்க்கு பதிலாக யுவராஜ்சிங், கனே வில்லியம்சன், கிறிஸ் ஜோர்டான், பிபுல் ஷர்மா ஆகியோர் இடம் பெற்றனர்.

நிதானமான ஆட்டம்

‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தனர்.

அணியின் ஸ்கோர் 4.2 ஓவர்களில் 25 ரன்னாக இருந்த போது தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (11 ரன், 13 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) உமேஷ்யாதவ் பந்து வீச்சை அடித்து ஆடினார். பந்து பேட்டில் பட்டு மேல் நோக்கி கிளம்பி விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா கையில் தஞ்சம் அடைந்தது.

டேவிட் வார்னர் 37 ரன்

அடுத்து கனே வில்லியம்சன், டேவிட் வார்னருடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் நேர்த்தியாகவும் ஆடினார்கள். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் சேர்த்தது. 9.2 ஓவர்களில் ஐதராபாத் அணி 50 ரன்னை எட்டியது. அணியின் ஸ்கோர் 12 ஓவர்களில் 75 ரன்னை எட்டுகையில், கனே வில்லியம்சன் (24 ரன்கள், 26 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) நாதன் கவுல்டர் நிலே பந்து வீச்சில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்த ஓவரில் கேப்டன் டேவிட் வார்னர் (37 ரன்கள், 35 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்) பியுஷ்சாவ்லா பந்து வீச்சில் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார். முன்னதாக டேவிட் வார்னர் 23 ரன்னை தொட்ட போது ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் 4 ஆயிரம் ரன்களை (114-வது ஆட்டங்களில்) கடந்த 5-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஏற்கனவே சுரேஷ்ரெய்னா (சென்னை, குஜராத்), விராட்கோலி (பெங்களூரு), ரோகித் சர்மா (டெக்கான், மும்பை), கம்பீர் (டெல்லி, கொல்கத்தா) ஆகியோர் 4 ஆயிரம் ரன்களை கடந்து இருக்கின்றனர்.

யுவராஜ்சிங் ஏமாற்றம்

இதைத்தொடர்ந்து விஜய் சங்கர், யுவராஜ்சிங்குடன் ஜோடி சேர்ந்தார். யுவராஜ்சிங் 9 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 9 ரன் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் பியுஷ் சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 15.3 ஓவர்களில் 99 ரன்னாக இருந்தது.

இதனை அடுத்து நமன் ஓஜா, விஜய் சங்கருடன் ஜோடி சேர்ந்தார். 15.4 ஓவர்களில் ஐதராபாத் அணி 100 ரன்னை தொட்டது. விஜய் சங்கர் 17 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் கவுல்டர் நிலே பந்து வீச்சில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அதே ஓவரில் கிறிஸ் ஜோர்டான் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் நமன் ஓஜா (16 ரன்கள், 16 பந்துகளில் ஒரு சிக்சருடன்) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் கிறிஸ் லின்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி 2 பந்துகள் மீதம் இருக்கையில் மழை பெய்தாலும் ஆட்டம் தொடர்ந்து நடந்தது.

ஐதராபாத் 128 ரன்கள்

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. பிபுல் ஷர்மா 2 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி தரப்பில் நாதன் கவுல்டர் நிலே 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட், பியுஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

மழை காரணமாக இரவு 11 மணி வரை 2-வது பாதி ஆட்டம் (கொல்கத்தா அணி பேட்டிங்) தொடங்கவில்லை.

ஸ்கோர் போர்டு

ஐதராபாத் சன் ரைசர்ஸ்

டேவிட் வார்னர் (பி)

பியுஷ் சாவ்லா 37

ஷிகர் தவான் (சி) ராபின்

உத்தப்பா (பி)உமேஷ்யாதவ் 11

கனே வில்லியம்சன் (சி)

சூர்யகுமார் யாதவ் (பி)

நாதன் கவுல்டர் நிலே 24

யுவராஜ்சிங்(சி)பியுஷ்சாவ்லா

(பி) உமேஷ் யாதவ் 9

விஜய் சங்கர் (சி) சூர்யகுமார்

யாதவ் (பி) நாதன்

கவுல்டர் நிலே 22

நமன் ஓஜா (சி) கிறிஸ் லின்

(பி) டிரென்ட் பவுல்ட் 16

கிறிஸ் ஜோர்டான் (சி) அண்ட்

(பி) நாதன் கவுல்டர் நிலே 0

பிபுல் ஷர்மா (நாட்-அவுட்) 2

எக்ஸ்டிரா 7

மொத்தம் (20 ஓவர்களில்

7 விக்கெட்டுக்கு) 128

விக்கெட் வீழ்ச்சி: 1-25, 2-75, 3-75, 4-99, 5-118, 6-119, 7-128.

பந்து வீச்சு விவரம்:

உமேஷ் யாதவ் 4-0-21-2

டிரென்ட் பவுல்ட் 4-0-30-1

சுனில் நரின் 4-0-20-0

யூசுப் பதான் 1-0-7-0

நாதன் கவுல்டர் நிலே 4-0-20-3

பியுஷ் சாவ்லா 3-0-27-1 

Next Story